வியாழன், 14 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 22 மார்ச் 2018 (13:02 IST)

வல்லபாய் பட்டேல் சிலைக்கு பாட்டில் மாலை: குஜராத்தில் பரபரப்பு

சமீபத்தில் திரிபுரா மாநிலத்தில் லெனின் சிலை உடைப்பு சம்பவத்தில் ஆரம்பித்த சிலை உடைப்பு விவகாரம் தமிழகத்தின் பெரியார் சிலை உடைப்பு வரை நீண்டுகொண்டே இருந்த நிலையில் நேற்று மர்ம நபர்கள் குஜராத்தில் உள்ள இந்தியாவின் இரும்பு மனிதர் என்று போற்றப்பட்ட சர்தார் வல்லபாய் பட்டேல் சிலைக்கு அவமரியாதை செய்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

 குஜராத் தலைநகர் காந்திநகர் அருகே உள்ள ஷிரேதா என்ற கிராமத்தில் சர்தார் வல்லபாய் பட்டேலின் சிலை கடந்த 1992-ம் ஆண்டு பா.ஜ.க. மூத்த தலைவரான எல்.கே.அத்வானி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இந்த பகுதியில் பட்டேல் சமூகத்தினர் அதிகம் வசிப்பதால் இந்த சிலை புனிதம் போன்று போற்றி பாதுகாக்கப்பட்டு வந்தது

இந்த நிலையில், நேற்றிரவு இந்த சிலைக்கு காலி குளிர்பான பாட்டில்கள் மற்றும் புல் ஆகியவற்றால் ஆன மாலையை  சில மர்மநபர்கள் அணிவித்து அவமரியாதை செய்துள்ளனர். காலை எழுந்தவுடன் இந்த அவமரியாதையை கண்ட கிராமவாசிகள் அதிர்ச்சி அடைந்து அந்த மாலையை அகற்றியதுடன் அருகாமையில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதனையடுத்து சிலையின் அருகே காவல் பணிக்கு போலீசார் நியமிக்கப்பட்டுள்ளதோடு, சிலையை அவமரியாதை செய்த மர்ம நபர்களுக்கு வலைவீசி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.