செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Modified: வியாழன், 6 ஆகஸ்ட் 2020 (20:57 IST)

மக்களின் பயத்தைப் பயன்படுத்தி அதில் லாபம் பதஞ்சலிக்கு அபராதம் !

கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துள்ளதாக விளம்பரம் செய்த பதஞ்சலி நிறுவனர் பாபா ராம்தேவ் மீது வழக்கு போடப்பட்ட நிலையில், மருந்து பயனளிப்பதற்கான ஆதாரம் இருப்பதாக பாபா ராம்தேவ் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அவர் மக்களுக்கு அச்சம் ஏற்படுத்தியதாக அவருக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பால் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்து வரும் நிலையில் அதற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் உலக நாடுகள் திணறி வருகின்றன. இந்நிலையில் பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் கொரோனா தடுப்பு மருந்தாக ‘கொரோனில்’ என்ற மருந்தை விளம்பரப்படுத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.

மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகத்தின் அனுமதி பெறாமல் அந்த மருந்து விற்கப்படுவதால் அதை தடை செய்ய வேண்டும் என ராஜஸ்தான் சுகாதாரத்துறை மந்திரி உள்ளிட்ட பலர் தெரிவித்தனர். இந்நிலையில் அரசின் அனுமதி பெறாமல் கொரோனா மருந்து என்று விளம்பரப்படுத்தியதற்காக பாபா ராம்தேவ் உள்ளிட்ட நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஹரித்துவாரில் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ள பாபா ராம்தேவ் “பதஞ்சலியின் கொரோனில் மருந்து மூலமாக 7 நாட்களில் கொரோனா நோயாளிகள் குணமடைகின்றனர். இந்த மருந்தின் மூலம் 3 நாட்களில் 67 சதவீதம் நோய் குணமடைகிறது. போதிய ஆராய்ச்சிகளை மேற்கொண்ட பிறகே இது விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இது தொடர்பான ஆவணங்கள் ஆயுஷ் அமைச்சகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன” என்று கூறியிருந்தார்..=

இந்நிலையில் கொரோனா வைரஸைக் குணப்படுத்துவதாகக் கூறி மக்களின் பயத்தைப் பயன்படுத்தி அதில் லாபம் ஈட்ட முயன்றதாகக் கூறி பதஞ்சலி ஆயுர்வேத  நிறுவனத்திற்கு ரூ 10 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், யோகா குரு ராம்தேவ் –ன் பதஞ்சலி நிறுவனம் தயாரித்துள்ள கொரொனா மருந்து என்பது எதிர்ப்பு சக்தி மருந்துதான் என்றும் அது கொரோனா நோயை குணப்படுத்தாது என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.