NDA கூட்டணிக்கு ஆதரவு கிடையாது.! பிஜு ஜனதா தளம் அதிரடி அறிவிப்பு..!!
நாடாளுமன்றத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு கிடையாது என்று நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம் அதிரடியாக அறிவித்துள்ளது.
ஒடிசா மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம் தோல்வியை சந்தித்தது. அதேபோல் மக்களவை தேர்தலிலும் அந்த கட்சி படுதோல்வியை சந்தித்தது. மொத்தம் உள்ள 21 தொகுதிகளில் பாஜக 20 தொகுதிகளையும், காங்கிரஸ் ஒரு தொகுதியையும் வெல்ல, ஆளும் கட்சியாக இருந்த பிஜு ஜனதா தளம் ஒரு தொகுதியை கூட வெல்ல முடியவில்லை.
மாநிலங்களவையில் அக்கட்சியை சேர்ந்த 9 பேர் எம்பிகளாக உள்ள நிலையில் நாடாளுமன்றத்தில் இனி பாஜகவுக்கு ஆதரவு கிடையாது என்று பிஜு ஜனதா தளம் அறிவித்துள்ளது. நவீன் பட்நாயக் தலைமையில் இன்று நடந்த அந்த கட்சியின் மாநிலங்களவை எம்.பிக்கள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பேசிய அக்கட்சியின் ராஜ்யசபா தலைவர் சஸ்மித் பத்ரா, “இந்த முறை பிஜேடி எம்.பிக்கள் பிரச்சினைகளை மட்டும் பேசுவதோடு நின்றுவிடாமல், ஒடிசாவின் நலனை மத்திய பாஜக அரசு புறக்கணித்தால் போராட்டம் நடத்தும் என்று தெரிவித்தார்.
மேலும் ஒடிசாவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் கோரிக்கையையும் வலுவாக வலியுறுத்துவோம் என்றும் நிலக்கரி ராயல்டியை திருத்தி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைப்போம் என்றும் அவர் கூறினார்.