1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 6 ஜூன் 2024 (13:31 IST)

அதிமுக - பாஜக கூட்டணி முறிவுக்கு அண்ணாமலைதான் காரணம்: வேலுமணி பேட்டி..!

அதிமுக - பாஜக கூட்டணி முறிவுக்கு அண்ணாமலைதான் காரணம் என கோவையில் முன்னாள் அமைச்சர் வேலுமணி பேட்டி அளித்துள்ளார்.
 
கோவை தொகுதியில் தி.மு.க வெற்றி பெற, இரண்டாம் இடத்துக்கு அண்ணாமலை வந்தார். ஆனால் ஜெயலலிதா காலத்திலிருந்து கோவையில் வலுவாக காலூன்றியிருந்த அ.தி.மு.க. 3ம் இடத்துக்கு தள்ளப்பட்டது.
 
மேற்கு மண்டல தளபதி என அதிமுகவினரால் கொண்டாடப்படும் எஸ்.பி.வேலுமணி எங்கே கோட்டை விட்டார் என அக்கட்சியினர் விவாதிக்கத் துவங்கியிருக்கிறார்கள். மேலும் அதிமுக சறுக்கியது எங்கே என்பது குறித்து வேலுமணி தலைமையில் கோவையில் ஆலோசனை நடைபெற்றது.
 
இந்த ஆலோசனையில் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள், அடிமட்ட பொறுப்பாளர்களிலிருந்து எம்.எல்.ஏ.க்கள் வரை பங்கேற்றனர். அதன்பின் கோவையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் எஸ்.பி.வேலுமணி கூறியதாவது:
 
அதிகமாக பேசியதே அண்ணாமலைதான், அதிமுக - பாஜக கூட்டணி முறிவுக்கு அண்ணாமலைதான் காரணம். அண்ணா, ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி குறித்து குறைகூறி பேசியவர் அண்ணாமலை.  கூட்டணியில் இருக்கும்போது கூட்டணி தர்மத்தை அதிமுக கடைபிடிக்கும். விலகினால் அவ்வளவுதான்.
 
அதிமுக மீதான விமர்சனங்களை தவிர்த்துவிட்டு அண்ணாமலை தனது தலைவர் பதவியை கவனிக்க வேண்டும்.  கடந்த தேர்தலைவிட அதிமுக கூடுதல் வாக்குகளை பெற்றுள்ளது.  சி.பி.ராதாகிருஷ்ணன் போட்டியிட்டபோது பெற்ற வாக்குகளைவிட அண்ணாமலை தற்போது குறைந்த வாக்குகளையே பெற்றுள்ளார். பாஜக கூட்டணியைவிட அதிமுக கூட்டணி அதிக வாக்குகளை பெற்றுள்ளது.  2026 சட்டமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை அதிமுக பெறும் என்று தெரிவித்தார்.
 
Edited by Siva