1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 31 ஜூலை 2019 (16:20 IST)

முத்தலாக் தடையால் மகிழ்ச்சியடைந்த பெண்.. பாஜக அரசுக்கு குவியும் பாராட்டு

முத்தலாக் தடை சட்டம் தனக்கு மகிழ்ச்சியளித்துள்ளதாக, முத்தலாக்கை எதிர்த்து போராடிய சாய்ரா பானு தெரிவித்துள்ளார்.

முஸ்லீம் பெண்களை, அவர்களது கணவர்கள், முன்று முறை ”தலாக்” கூறி விவாகரத்து செய்வது இஸ்லாமிய வழக்கமாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த வழக்கத்தை தடை செய்யும் வகையில் கடந்த பாஜக ஆட்சியின் போது, முத்தலாக் தடை மசோதா கொண்டு வரப்பட்டது. இந்த மசோதாவை காங்கிரஸ், திமுக ஆகிய கட்சிகள் எதிர்த்து வந்தனர்.

இதை தொடர்ந்து மக்களவையில் முத்தலாக் தடை மசோதா நிறைவேறியது. ஆனால் மாநிலங்கவையில் பா.ஜ,க. கூட்டணிக்கு பெரும்பான்மை இல்லாததால் முத்தலாக் தடை மசோதா நிலுவையிலேயே இருந்தது. இதனிடையே மக்களவையின் பதவி காலம் முடிவடைந்து கலைக்கப்பட்டதால், முத்தலாக் தடை சட்டம் காலாவதியானது.

இந்நிலையில் முத்தலாக் தடை சட்டத்தை மாநிலங்களவையில் தற்போதைய பாஜக அரசின் மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தாக்கல் செய்தார். பிறகு இந்த முத்தலாக் தடை மசோதா நிறைவேற்றப்பட்டது.

இதனிடையே முத்தலாக்கை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்த சாய்ரா பானு என்பவர், முத்தலாக் தடை சட்டம் நிறைவேறியதில் மகிழ்ச்சி அடைந்துள்ளார். இது குறித்து சாய்ரா பானு, அளித்த பேட்டியில், முத்தலாக் சட்டத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பு மிகப் பெரிய வெற்றி எனவும், இந்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டிருப்பது முத்தலாக் மூலம் பெண்களுக்கு விவாகரத்து கொடுக்கும் கணவன்மார்களுக்கு நிச்சயம் பயத்தை ஏற்படுத்தும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் பல பென்ணிய அமைப்புகள் இந்த சட்ட மசோதாவிற்கு ஆதரவு தந்துள்ள நிலையில், பாரதீய முஸ்லீம் மகிளா அண்டோலன் என்ற அமைப்பைச் சேர்ந்த ஷகியா சோமன் எனபவர் முத்தலாக் சட்ட மசோதா வரலாற்று சிறப்புமிக்க வளர்ச்சி எனவும் புகழ்ந்துள்ளார்.