2 மாதம் சம்பளம் வரவில்லை. பிச்சை எடுக்க அனுமதி வேண்டும்: காவலரின் கடிதத்தால் பரபரப்பு
இரண்டு மாதமாக சம்பளம் வரவில்லை என்பதால் குடும்ப செலவுக்கு பணம் இல்லாமல் தவிப்பதாகவும், அதனால் தனக்கு காவலர் சீருடையுடன் பிச்சை எடுக்க அனுமதி தரவேண்டும் என்றும் போலீஸ் கமிஷனருக்கு மும்பையை சேர்ந்த காவலர் ஒருவர் எழுதியுள்ள கடிதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையை சேர்ந்த தயானேஷ்வரர் என்ற கான்ஸ்டபிள், மகாராஷ்டிரா முதல்வருக்கும் போலீஸ் கமிஷனருக்கும் எழுதிய கடிதத்தில் கூறியுள்ளதாவது:
எனக்கு இரண்டு மாதமாக சம்பளம் வரவில்லை. எனது மனைவிக்கு சிகிச்சை அளிக்கவும், வங்கியில் வாங்கிய லோனுக்கு பணம் கட்டவும் என்னிடம் பணம் இல்லை. சம்பளம் வராததால் எனக்கு வேறு வழி தெரியவில்லை. எனவே காவலர் உடையில் பிச்சை எடுக்க அனுமதிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று தயானேஷ்வரர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் கூற காவல்துறை அதிகாரிகள் மறுத்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.