வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : ஞாயிறு, 21 ஜூலை 2024 (13:20 IST)

நாளை கூடுகிறது மழைக்கால கூட்டத் தொடர்.! புயலை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்..!!

students
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நாளை தொடங்க உள்ள நிலையில் ஜூலை 23ஆம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்கிறார். தொடர்ந்து 7வது முறையாக அவர் பட்ஜெட் தாக்கல் செய்கிறார்.  
 
சாதனை நாயகி நிர்மலா:
 
சுதந்திர இந்தியாவில் தொடர்ந்து 7வது முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யும் நிதி அமைச்சர் என்கிற சிறப்பை நிர்மலா சீதாராமன் பெறுகிறார். இதற்கு முன் மொராஜி தேசாய் ஆறு முறை மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்திருந்தார். 1959 முதல் 1964 ஆண்டு வரை மொராஜி தேசாய் 6 முறை மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்திருந்தார். தற்போது அந்த சாதனையை நிர்மலா சீதாராமன் முறியடிக்கிறார். 
 
கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் செய்யபட உள்ளது. மக்களவை தேர்தலுக்கு முன்பாக இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. பட்ஜெட்டை முன்னிட்டு பல்வேறு கட்டங்களாக பொருளாதார ஆய்வாளர்கள் உள்ளிட்டோருடன் மத்திய நிதி அமைச்சக அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.

nirmala
6 மசோதாக்கள் தாக்கல்:
 
நடப்பு மழைக்கால கூட்டத் தொடரில் ஆறு மசோதாக்களை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. சிவில் விமானப் போக்குவரத்துத் துறையில் எளிதாக வணிகம் செய்வதற்கு வழிவகை செய்யும் பொருட்டு 1934ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட விமானச் சட்டத்திற்கு பதிலாக பாரதிய வாயுயன் விதேயக் (Bhartiya Vayuyan Vidheyak) சட்டத்தை கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.  
 
எதிர்க்கட்சிகள் திட்டம்:
 
இதனிடையே நீட் தேர்வு விவகாரம், மணிப்பூர் கலவரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை எழுப்பி நாடாளுமன்றத்தை முடக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இதனால் நாடாளுமன்றத்தில் அனல் பறக்கும் விவாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 
அனைத்து கட்சி கூட்டம்:
 
மழைக்கால கூட்டத் தொடருக்கு முன்னதாக அனைத்து கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் தற்போது நடைபெற்று வருகிறது. அமைதியான முறையில் கூட்டத் தொடரை நடத்தி முடிப்பது உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது. அதேநேரம் இந்த கூட்டத்தை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி புறக்கணித்துள்ளது.