வெள்ளி, 4 அக்டோபர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 17 செப்டம்பர் 2024 (17:28 IST)

மணிப்பூரில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு.. இயல்பு நிலை திரும்புகிறதா?

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பாஜக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் கடந்த ஆண்டு மே மாதத்தில், குகி மற்றும் மெய்தி இன மக்களுக்கிடையே வெடித்த கலவரம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தக் கலவரத்தில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கான மக்கள் தங்களுடைய வீடுகளை விட்டு வெளியேறி நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்தனர்.

இந்நிலையில், சில மாதங்கள் அமைதி நிலவிய பின்னர், மணிப்பூரில் மீண்டும் வன்முறைகள் ஆங்காங்கே ஏற்பட்டு வருகின்றன. டிரோன்கள், சிறிய விமானங்கள், வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட ராக்கெட்டுகள் போன்ற பலவிதமான ஆயுதங்களை பயன்படுத்தி, சில ஆயுதக்குழுக்கள் தாக்குதல்களை முன்னெடுத்து வருகின்றன.

மணிப்பூரின் ஜிரிபாம் மாவட்டத்தில் செப்டம்பர் 7ம் தேதி நடைபெற்ற வன்முறை சம்பவங்களில் 8 பேர் கொல்லப்பட்டதுடன், 12 பேர் காயமடைந்தனர்.

வன்முறையை கட்டுப்படுத்த அரசு பல மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி, செப்டம்பர் 10ம் தேதி முதல் 15ம் தேதி வரை இணைய சேவைகளை தற்காலிகமாக நிறுத்தியது.

இந்த நிலையில் தற்போது மணிப்பூரில் இயல்பு நிலை படிப்படியாக திரும்பி வருவதை அடுத்து  இன்று பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. வன்முறை சம்பவங்களும் குறைந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

Edited by Mahendran