யூட்யூப் பார்த்து வெடிக்குண்டு தயாரிப்பு! – விமான நிலைய வெடிக்குண்டு விவகாரம்!
மங்களூரு விமான நிலையத்தில் வெடிக்குண்டு வைத்த என்ஜீனியர் யூட்யூப் பார்த்து வெடிக்குண்டு செய்ததாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவில் உள்ள மங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் கடந்த 20ம் தேதி டிக்கெட் கவுண்டர் அருகே சக்திவாய்ந்த வெடிக்குண்டுகள் கண்டெடுக்கப்பட்டன. உடனடியாக அதை கைப்பற்றிய வெடிக்குண்டு நிபுணர்கள் அதை செயலிழக்க செய்தனர்.
இதுகுறித்து தீவிர விசாரணையில் இறங்கிய மங்களூரு காவல்துறை சிசிடிவி கேமராவை ஆராய்ந்தபோது ஒரு நபர் ஆட்டோவில் வந்து வெடிக்குண்டு உள்ள பையை வைத்துவிட்டு செல்வது தெரிய வந்தது. அந்த நபர் குறித்து தொடரப்பட்ட விசாரணையில் அவர் உடுப்பி மாவட்டத்தை சேர்ந்த ஆதித்யா ராவ் என தெரிய வந்தது. அவரை கைது செய்ய போலீஸார் தேடிக்கொண்டிருந்த நிலையில் அவர் தலைமறைவானார். இந்நிலையில் நேற்று காலை காவல் நிலையம் வந்த ஆதித்ய ராவ் சரணடைந்துள்ளார். அவரை அழைத்து சென்று விசாரித்தபோது மேலும் அதிர்ச்சிகரமான தகவல்கள் கிடைத்ததாக கூறப்படுகிறது.
என்ஜீனியரிங் படித்த ஆதித்ய ராவ் படிப்புக்கு தகுந்த வேலை கிடைக்காததால் அடிக்கடி விமான நிலையங்களுக்கு, ரயில் நிலையங்களுக்கு வெடிக்குண்டு மிரட்டல் விடுத்து வந்துள்ளார். இதற்காக சில வருடங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பிறகு விடுதலையான அவர் ஒரு ஹோட்டலில் வேலை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது.
ஆன்லைன் மூலம் வெடிப்பொருட்களை வாங்கி யூட்யூபில் வெடிக்குண்டு செய்யும் முறையை பார்த்து அதன்படி வெடிக்குண்டு செய்ததாக அவர் கூறியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளனர். எனினும் அவர் எந்த நோக்கத்திற்காக இதை செய்தார்? அவருக்கு பின்னால் யாராவது உள்ளார்களா? என்பது குறித்தும் போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.