செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 6 ஜனவரி 2020 (14:26 IST)

சொந்த கட்சியினரால் தாக்கப்பட்டாரா ரோஜா? – ஆந்திராவில் பரபரப்பு!

நகரி தொகுதி எம்.எல்.ஏ ரோஜாவை சொந்த கட்சியினரே தாக்க முயற்சித்ததாக வெளியான வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திரைப்பட நடிகையாக இருந்து அரசியலுக்கு வந்தவர் ரோஜா. ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்த இவர் ஆந்திர சட்டமன்ற தேர்தலில் நகரி தொகுயில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இவருக்கும் சித்தூர் மாவட்டம் கே.வி.புரத்தை சேர்ந்த ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் பிரமுகர் அம்முலுவுக்கும் உள் தகராறு இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கே.வி.புரத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள கிராம தலைமை செயலகத்தை திறந்து வைக்க சென்ற ரோஜாவை அம்முலு ஆதரவு ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினர் தாக்க முயற்சித்ததாக கூறப்படுகிறது.

சொந்த கட்சியினராலேயே ரோஜாவின் கார் தாக்கப்படுவதாக வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள ரோஜா தனது காரை தாக்க முயற்சித்தது தனது கட்சியினர் அல்ல எனவும், எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம்தான் திட்டமிட்டு இதுபோல செய்துள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் ஆந்திர அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.