மோடி ஆட்சியில் ரயில் விபத்துகள் அதிகரிப்பு..! ராகுல் காந்தி கண்டனம்.!!
பிரதமர் மோடி ஆட்சியில் தான் ரயில் விபத்துகள் அதிகரித்துள்ளதாக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் இதுவரை 15 பேர் உயிரிழந்ததாகவும், 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்ததுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
இந்த விபத்து சம்பவத்திற்கு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு, காங்கிரஸ் கட்சியின் எம்பி ராகுல் காந்தி இரங்கலை தெரிவித்ததோடு மோடிக்கு கண்டனத்தையும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், மேற்கு வங்கத்தில் காஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் விபத்தில் பலர் உயிரிழந்த செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது என்றும் இழந்து வாடும் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 10 ஆண்டுகளில் ரயில் விபத்துக்கள் அதிகரித்துள்ளதாகவும், மோடி அரசின் தவறான நிர்வாகத்தின் மற்றும் புறக்கணிப்பின் நேரடி விளைவாகும், ஒவ்வொரு நாளும் பயணிகளின் உயிர் மற்றும் உடைமை இழப்புகள் ஏற்படுகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பொறுப்புள்ள எதிர்க்கட்சி என்ற வகையில், இந்த பயங்கரமான அலட்சியத்தை நாங்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி, இந்த விபத்துக்களுக்கு மோடி அரசை பொறுப்பேற்கச் செய்வோம் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.