1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 7 ஜூன் 2022 (17:42 IST)

குளிர்பானத்தில் கிடந்த பல்லி; மெக்டொனால்டு கடைக்கு சீல், அபராதம்!

Mc Donald
குஜராத்தில் உள்ள மெக்டொனால்டு கடையில் வாங்கிய குளிர்பானத்தில் பல்லி கிடந்த புகாரில் அந்த கடையை மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.

குஜராத் மாநிலம் ஆமதாபாத் நகரில் பிரபலமான மெக்டொனால்டு கிளை கடை செயல்பட்டு வருகிறது. இங்கு அப்பகுதியை சேர்ந்த பார்கவ் ஜோஷி என்பவர் தனது நண்பர்களுடன் உணவருந்த சென்றுள்ளார். அங்கு கோக் குளிர்பானம் ஆர்டர் செய்துள்ளனர்.

அவர்களுக்கு அளிக்கப்பட்ட குளிர்பானத்தில் ஒரு கோப்பையில் இறந்த பல்லி கிடந்துள்ளது. இதுகுறித்து பார்கவ் ஜோஷி கடை மேலாளரிடம் புகார் அளித்ததற்கு அதற்கான தொகையை மட்டும் திரும்ப தந்துவிடுவதாக கூறியுள்ளார். பல்லி கிடந்த வீடியோவை பார்கவ் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

இந்த வீடியோ வைரலான நிலையில் நடவடிக்கை எடுத்த ஆமதாபாத் மாநகராட்சி மெக்டொனால்டு கடையை பூட்டி சீல் வைத்ததுடன், ரூ.1 லட்சம் அபராதமும் விதித்துள்ளது. இதுகுறித்து தனது வருத்தத்தை தெரிவித்துள்ள மெக்டொனால்டு நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு தரமான உணவு வழங்குவதில் இனி கூடுதல் கவனத்துடன் செயல்படுவோம் என தெரிவித்துள்ளது.

சீல் வைக்கப்பட்ட மெக்டொனால்டு கடையை இரண்டு நாட்கள் கழித்து திறந்து முழுவதும் சுத்தம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. அதிகாரிகள் சோதனை மேற்கொண்ட பிறகு மீண்டும் கடை செயல்பட அனுமதி அளிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.