ஆந்திராவில் மர்மக்காய்ச்சல் பீதி – பாதிப்பு எண்ணிக்கை 443 ஆக உயர்வு!
ஆந்திராவில் மர்மக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 443 ஆக உயர்ந்துள்ளது.
ஆந்திர மாநிலம் எலுரு பகுதியில் மக்கள் மர்மமான நோய் ஒன்றினால் பாதிக்கப்பட்டு வருவது பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்ட மக்கள் வாந்தி, மயக்கம் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்படுவதுடன் வித்தியாசமான குரலில் அலறுவதாகவும் கூறப்படுகிறது. இந்த நோய் எதனால் பரவுகிறது என்பது புரியாமல் மருத்துவர்கள் குழம்பியுள்ள நிலையில் இந்த மர்ம நோயால் ஒருவர் பலியாகியுள்ளார்.
இதையடுத்து நேற்று முன் தினம் வரை 300க்குள் இருந்த பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று மாலை 443 ஆக உயர்ந்துள்ளது. இதில் 230 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். ஆனால் அவர்களில் 3 பேர் மீண்டும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு திரும்பி வந்துள்ளனர். மேலும் மருத்துவமனையில் காவலுக்கு இருந்த ஒரு காவலருக்கும் இந்த காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் இது தொற்றுவியாதி இல்லை என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களில் 16 நோயாளிகளின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் அவர்கள் மேல் சிகிச்சைக்காக குண்டுர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.