செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 30 மார்ச் 2019 (10:55 IST)

’மிஷன் சக்தி’ குறித்து பிரதமரின் பேச்சு – தேர்தல் ஆணையம் விளக்கம் !

மிஷன் சக்தி திட்டம் குறித்த பிரதமர் மோடியின் பேச்சில் எந்தவொரு தேர்தல் விதிமீறலும் இல்லை எனக் கூறப்பட்டுள்ளது.
 

பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன் தினம் டுவிட்டரில் இன்னும் சில நிமிடங்களில் நாட்டு மக்களுக்கு ஒரு முக்கிய விஷயத்தை தெரிவிக்கவிருப்பதாக குறிப்பிட்டிருந்தார். மீண்டும் பணமதிப்பிழப்பா? என்பது உள்பட பல ஐயங்கள் அனைவரிடத்தில் தொற்றி கொள்ள ஒரு வழியாக 'மிஷன் சக்தி' என்ற விண்வெளி திட்டத்தின் சாதனை குறித்த தகவலை பிரதமர் மோடி வெளியிட்டார்.

பிரதமரின் இந்த உரை தூர்தர்ஷன் மற்றும் ஆல் இந்தியா ரேடியோவில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்த நிலையில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல் நன்னடத்தை அமலில் இருக்கும் நிலையில் பிரதமர் இவ்வாறு பேசியது சரியா? என்று எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பினர். இதுகுறித்து தேர்தல் ஆணையத்தில் புகார்களும் பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் பிரதமரின் உரை குறித்து பதிலளிக்க தூர்தர்ஷன், ஆல் இந்தியா ரேடியோவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் விளக்கம் ஒன்றை அளித்துள்ளது. அதில் பிரதமர் மோடியின் பேச்சில் எந்தவொரு தேர்தல் விதிமுறைகளும் மீறப்படவில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரதமர் மோடியின் 'மிஷன் சக்தி' திட்டம் குறித்த பேச்சை ஆய்வு செய்ய அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு அளித்த அறிக்கையில், பிரதமரின் பேச்சில் எந்தவிதமான தேர்தல் நடத்தை விதமுறைகளையும் மீறவில்லை. அரசின் ஊடகங்களை அவர் தவறாகப் பயன்படுத்தவில்லை. இது தொடர்பாக தூர்தர்ஷன், அகில இந்திய வானொலி நிலையத்தின் மூத்த அதிகாரிகளை அழைத்துப் பேசினோம். அவர்கள் அளித்த தகவலில், தனியார் ஏஜென்சி அளித்த வீடியோவின் அடிப்படையில்தான் பிரதமர் மோடியின் பேச்சை ஒளிபரப்பினோம் என்று தெரிவித்துள்ளனர். தூர்தர்ஷனிடம் இருந்து ஆடியோ எடுத்து தாங்கள் பயன்படுத்தியதாக அகில இந்திய வானொலி நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிரதமர் மோடியின் பேச்சை பிரத்யேகமாக ஒலிபரப்பாமல், செய்தியாகவே ஒலிபரப்பினோம் என்று அகில இந்தியா வானொலி நிலையம் தெரிவித்துள்ளது. தூர்தர்ஷன் மட்டுமல்லாமல், 60-க்கும் மேற்பட்ட சேனல்கள் பிரதமர் மோடியின் பேச்சை ஒளிபரப்பினார்கள் என்று தூர்தர்ஷன் விளக்கமளித்துள்ளது.

பிரதமர் மோடியின் பேச்சில் அரசின் சாதனைகள் குறித்தோ அல்லது குறிப்பிட்ட அரசியல் கட்சி அல்லது தனிமனிதர் குறித்தோ எந்தவிதமான குறிப்பும் இடபெறவில்லை. 'மிஷன் சக்தி' திட்டம் குறித்தும், இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கும் பாராட்டு மட்டுமே தெரிவித்துள்ளார். ஆதலால், இதில் தேர்தல் விதிமுறை மீறல் ஏதும் இல்லை