வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : புதன், 31 ஜூலை 2024 (11:20 IST)

ஆளுநர் உரையை புறக்கணித்த திமுக - காங்கிரஸ் எம்எல்ஏக்கள்.! சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு..!!

MLAs Boycot
புதுச்சேரி சட்டப்பேரவையில் ஆளுநர் உரையை புறக்கணித்து திமுக, காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
 
புதுவை சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று பேரவையில் உரை நிகழ்த்துவதற்காக துணை நிலை ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் காலை 9.30 மணிக்கு சட்டப்பேரவைக்கு வந்தார். அவருக்கு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. 
 
தொடர்ந்து பேரவையில் ஆளுநர் ராதாகிருஷ்ணன் பேசத்தொடங்கியபோது, எதிர்க் கட்சித் தலைவர் சிவா உள்ளிட்ட திமுக, காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் எழுந்து நின்றனர். சிவா ஆளுநரிடம் அரசின் செயல்பாடுகளை விமர்சிக்கத் தொடங்கினார். 
 
அதற்கு ஆளுநர், “தவறு இருந்தால் சுட்டிக்காட்டுங்கள். அரசு தரப்பில் திருத்திக் கொள்ளட்டும். முதலில் எனது உரையைக் கேளுங்கள். தயவு செய்து அமருங்கள். இது எனது முதல் உரை என்று தெரிவித்தார். தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராக மோடி பதவியேற்றதற்கு வாழ்த்துகள் என்று குறிப்பிட்டு பேசத் தொடங்கினார். 

 
அப்போது எதிர்க்கட்சித் தலைவர் சிவா மற்றும் திமுக, காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் எழுந்து நின்று, "எதுவுமே நிறைவேற்றாமல் நிறைவேற்றியதாக படிக்கிறீர்கள்" என்று சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பினர். ஆளுநர் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தார். இதையடுத்து ஆளுநர் உரையை புறக்கணித்து திமுக, காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் வெளிநடப்பு செய்தனர்.