1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : செவ்வாய், 23 ஜூலை 2024 (13:41 IST)

பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிப்பு.! பீகார் - ஆந்திராவுக்கு வாரி வழங்கிய மத்திய அரசு..!!

Central Budjet
மக்களவையில் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு ஒரு ரூபாய் கூட நிதி ஒதுக்காததற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனங்களைத் தெரிவித்து  வருகின்றனர்.
 
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்ற மக்களவையில் இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பீகார், ஜார்கண்ட், ஒடிஸா, மேற்கு வங்கம் மற்றும் ஆந்திர மாநிலங்களின் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
 
பீகாருக்கு நிதி ஒதுக்கீடு: 
 
பீகாரில் சாலைகள், மேம்பாலங்கள் அமைக்க ரூ. 26,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பீகாரின் கயா பகுதியில் தொழில்துறை முனையம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
பீகாருக்கு வெள்ளம் மற்றும் பேரிடர் நிவாரண நிதியாக ரூ.11,000 கோடி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விமான நிலையங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
Budjet Central
ஆந்திராவுக்கு நிதி ஒதுக்கீடு:
 
ஆந்திர பிரதேச மாநிலத்தின் வளர்ச்சிக்காக ரூ. 15,000 கோடி சிறப்பு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அம்மாநிலத்தின் தலைநகராக உருவாகும் அமராவதியை மேம்படுத்த ரூ.15,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
 
ஆந்திரத்தில் மின்சாரம், ரயில்வே, சாலை உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அம்மாநிலத்தின் பின்தங்கியுள்ள மாவட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Modi
தமிழ்நாடு புறக்கணிப்பு:
 
பட்ஜெட்டில் ஆந்திரா, பீகார் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தை மத்திய அரசு முற்றிலும் புறக்கணித்துள்ளது. தமிழ்நாட்டிற்கு வெள்ள நிவாரணம் வழங்காததை கண்டித்து  நாடாளுமன்றத்தில் தமிழ்நாடு எம்பிக்கள் முழக்கமிட்டு தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.
 
தமிழ்நாட்டின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து எந்த அறிவிப்பும் மத்திய பட்ஜெட்டில் இடம் பெறவில்லை. ஏற்கனவே வெள்ள நிவாரண நிதி, மெட்ரோ ரயில் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தி இருந்த நிலையில், பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு ஒரு ரூபாய் கூட நிதி ஒதுக்கீடு செய்யப்படாததற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

 
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, ஆட்சியை தக்கவைக்கவே பீகார் ஆந்திராவிற்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாகவும், வேண்டுமென்றே தமிழ்நாட்டை மத்திய அரசு புறக்கணித்துள்ளதாகவும் தமிழக அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. குறிப்பாக பட்ஜெட் உரையில் தமிழகம் என்ற வாசகமே இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.