கைதியின் முதுகில் ஓம் வடிவில் சூடு – சர்ச்சையைக் கிளப்பும் புகைப்படம் !
திகார் சிறையில் விசாரணைக் கைதியாக இருக்கும் கைதி ஒருவரின் முதுகில் ஓன் வடிவில் சூடுவைக்கப்பட்டுள்ளதால் சர்ச்சைகள் எழுந்துள்ளன.
திகார் சிறையில் வடகிழக்குப் பகுதியின் சீலாம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ஷபீர் என்ற நபீர் என்பவர் ஆயுதக் கடத்தல் மற்றும் கொலை குற்றம் ஆகியப் பிரிவுகளின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த 3 ஆண்டுகளாக அந்த சிறையில் உள்ளார்.
இந்நிலையில் இவர் சில தினங்களுக்கு முன்னர் தனது அறையில் உள்ள இண்டக்ஷன் ஸ்டவ் சரியாக வேலை செய்யவில்லை என சிறைக்கண்காணிப்பாளர் ராஜேஷ் என்பவரிடம் புகார் அளித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ராஜேஷ் தனது சக அதிகாரிகளும் சேர்ந்து தாக்கியுள்ளனர். அதையடுத்து அவரது முதுகில் இந்தியில் இந்து மத அடையாளமான ஓம் எனும் வார்த்தை வடிவத்தில் சூடு வைத்துள்ளனர்.
இதனை நீதிமன்றத்துக்கு விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட போது நபீர் நீதிபதிகளிடம் காட்டியுள்ளார். இதனால் நபீரின் உறவினர்கள் அவரது உயிருக்கு ஆபத்துள்ளதாக நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். அதையடுத்து வழக்கை விசாரித்த டெல்லி மேஜிஸ்திரேட் ’நபீர் உடம்பில் உள்ள தழும்பு குறித்து மருத்துவ அறிக்கை சமர்ப்பிக்கும் படியும் சிறையில் உள்ள சிசிடிவி கேமராக்களின் பதிவுகளை சமர்ப்பிக்கும் படியும் உத்தரவிட்டுள்ளார்.