ஜார்கண்ட் இடைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி –வலுவிழக்கும் பாஜக
ஜார்கண்ட் மாநிலம் கோலேபிரா தொகுதியில் நடைபெற்ற இடைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் நமன் பிக்சல் கொங்காடி அமோக வெற்றி பெற்றார்.
ஜார்கண்ட் மாநிலம் கோலேபிரா தொகுதி சட்டமன்ற உறுப்பினரான ஜார்கண்ட் கட்சி தலைவர் ஏனாஸ் ஏக்கா. கடத்தல் மற்றும் கொலை வழக்கில் சிக்கி சிறையில் இருப்பதால் அந்தத் தொகுதி காலியாக இருந்தது.
இதனால் அந்த தொகுதிக்கு டிசம்பர் 20-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் பாஜக வேட்பாளராக பசன்ட் சோரெங்னும், காங்கிரஸ் சார்பில் நமன் பிக்சல் கொங்காரியும், ஜார்கண்ட் கட்சி சார்பில் ஏனாஸ் ஏக்காவின் மனைவியான மேனான் ஏக்காவும் போட்டியிட்டனர்.
வழக்கமாக இடைத் தேர்தல்களில் ஆளும் கட்சியே வெற்றிப்பெறுவது வழக்கமாகும். அதனால் பாஜக ஆளும் மாநிலமான ஜார்க்கண்ட்டில் பாஜக வேட்பாளரே வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கை முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் நமன் பிக்சல் கொங்காடி 9,658 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவித்தார்.
ஏற்கனவே 5 மாநிலத் தேர்தல்களில் பாஜக படுதோல்வி அடைந்ததை அடுத்து பாஜக அலை ஓய்ந்து விட்டதாக பேச்சு எழுந்தது. இதையடுத்து இந்த இடைத்தேர்தல் முடிவு பாஜக வின் பலம் தொடர்ச்சியாக குறைந்து வருவது மேலும் உறுதியாகியுள்ளது.