1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 31 ஆகஸ்ட் 2020 (09:03 IST)

ஊழலில் ஈடுபட்டால் முன் கூட்டியே ஓய்வு! – அரசு ஊழியர்களுக்கு புதிய உத்தரவு!

ஊழலில் ஈடுபடும் மற்றும் செயல்திறன் குறைவாக உள்ள பணியாளர்களுக்கு முன் கூட்டிய ஓய்வு அளிப்பது குறித்து மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

மத்திய அரசின் பணியிடங்களில் பணிபுரிபவர்கள் பணி ஓய்வு குறித்த சுற்றறிக்கை ஒன்றை மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

அதன்படி ஒரு ஊழியர் 50 அல்லது 55 வயதை எட்டிவிட்டாலோ அல்லது 30 ஆண்டுகள் பணி நிறைவு செய்திருந்தாலோ அவரது பணி பதிவேட்டை ஆய்வு செய்ய வேண்டும். அவர் செயல்திறமையற்றவராகவோ அல்லது ஊழலில் ஈடுபட்டவராகவோ இருந்தால் பொதுநலன் கருதி முன்கூட்டியே ஓய்வு பெற செய்வதற்கு அரசியலமைப்பில் அதிகாரம் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

முன்கூட்டியே ஓய்வு பெற செய்ய வேண்டிய அரசு ஊழியர்களுக்கு 3 மாதங்களுக்கு முன்பே நோட்டீஸ் அனுப்ப வேண்டும் அல்லது 3 மாத சம்பளம் மற்றும் படிகளை அவர்களுக்கு அளிக்க வேண்டும் என்றும், ஓய்வூதியம் அவர்களுக்கு உண்டு என்றும் அந்த சுற்றறிக்கையில் விளக்கப்பட்டுள்ளது.