1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 29 ஜூன் 2021 (16:46 IST)

புதிய டிஜிட்டல் ஊடக நன்னடத்தை விதிகள் குறைகளை தீர்க்கும்! – தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் விளக்கம்!

பொதுமக்களின்‌ குறைகளை தீர்ப்பதற்கான மக்கள்‌ சார்ந்த ஒழுங்குமுறையாக புதிய டிஜிட்டல்‌ ஊடக நன்னடத்தை விதி- 2021 அமைந்துள்ளது என்று மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சக இணை செயலாளர் விக்ரம் சஹாய் தெரிவித்துள்ளார்.

தென் மாநிலங்களில் உள்ள திரைத் துறையினர், ஓடிடி தளங்கள், டிஜிட்டல் செய்தி வெளியீட்டாளர்கள் மற்றும் கல்வியாளர்களுடன் நேற்று காணொலி மூலம் நடைபெற்ற உரையாடலின் போது அவர் இவ்வாறு கூறினார்.

ஓடிடி தளங்கள் மற்றும் டிஜிட்டல் செய்தி வெளியீட்டாளர்கள் தொடர்பான டிஜிட்டல் ஊடக நன்னடத்தை விதி-2021-ன் மூன்றாம் பாகம் குறித்து பேசிய அவர், டிஜிட்டல் ஊடக தளங்களில் முன்னெப்போதும் இல்லாத அளவு செய்திகள், திரைப்படங்கள் மற்றும் இதர உள்ளடக்கம் அதிகரித்ததை தொடர்ந்து பாரம்பரிய மற்றும் டிஜிட்டல் ஊடக தளங்களுக்கிடையே சமமான களத்தை ஏற்படுத்துவதற்காக அது உருவாக்கப்பட்டது என்றார்.

முறையான குறைதீர்ப்பு முறை உருவாக்கப்பட்டதன் மூலம் அமைச்சகத்தால் பெறப்படும் குறைகளின் எண்ணிக்கை தற்போது குறைந்துள்ளதாக திரு சஹாய் கூறினார். ஆன்லைன் செய்தி தளங்களுக்கு பதிவு எதுவும் தேவையில்லை என்றும், அதே சமயம், பதிப்பாளர் குறித்த தகவல் பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில் வழங்கப்படுவது அவசியம் என்றும் அவர் கூறினார்.

நன்னடத்தை விதிகளை பின்பற்றுவது தொடர்பாக டிஜிட்டல் தளத்தில் உள்ள சிறு நிறுவனங்கள் வெளியிட்டுள்ள கவலைகள் குறித்து பேசிய திரு சஹாய், ஏற்கனவே இருக்கும் தேசிய ஒழுங்குமுறை அமைப்புகளுடன் இணையாமல், சிறு நிறுவனங்கள் முன்வந்து புதிய சுய ஒழுங்குமுறை அமைப்புகளை உருவாக்கலாம் என்றார். இது தொடர்பான பல கோரிக்கைகளை தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் ஏற்கனவே பெற்றுள்ளதாகவும், சுய ஒழுங்குமுறை அமைப்புகளை உருவாக்க சிறு நிறுவனங்களை வரவேற்பதாகவும் அவர் தெரிவித்தார். புதிய விதிகள் தொடர்பான தொழில்துறையின் அனைத்து கவலைகள் மற்றும் சந்தேகங்களை போக்க அரசு தயாராக உள்ளதாகவும் அவர் கூறினார்.

திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு உள்ள கட்டுப்பாடுகள் மற்றும் ஓடிடி உள்ளடக்க தயாரிப்பாளர்களுக்கு உள்ள முழு படைப்பு சுதந்திரம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், புதிய விதிகள் உருவாகி வருவதாகவும், ஆன்லைன் பதிப்பாளர்கள் மற்றும் உள்ளடக்க படைப்பாளிகள் அமைச்சகத்தில் பதிவு செய்து கொள்வது குறித்த கேள்விகள் அமைச்சகத்திற்கு வந்துள்ளதாகவும் கூறினார். அங்கீகாரம் பெற்ற அமைப்பின் ஒரு அங்கமாக அவர்கள் இருக்க விரும்புவதை இது காட்டுகிறது.

1500-க்கும் அதிகமான பதிப்பாளர்கள் தங்களது விவரங்களை ஏற்கனவே பதிவு செய்துள்ளதாகவும், பதிப்பாளர்கள் அனைவரும் நன்னடத்தை விதிகளை பின்பற்றி, எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு விரைவாக தகவல்களை அமைச்சகத்திற்கு அளித்து, பரஸ்பர ஒப்புதலுடன் சுய கட்டுப்பாட்டு அமைப்பை ஏற்படுத்தி, குறைகளை தீர்த்தது குறித்த தகவல்களை வழங்க வேண்டும் என்று திரு விக்ரம் சஹாய் கூறினார்.

முன்-தணிக்கை குறித்து பேசிய அவர், திரைப்படங்கள் (சினிமாடோகிராப்) சட்டம், 1952-ஐ திருத்துவது குறித்த கருத்துகளை பங்குதாரர்களிடம் இருந்து அரசு ஏற்கனவே வரவேற்றுள்ளதாக கூறினார்.

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் இருந்து ஆன்லைன் ஊடகங்கள், ஓடிடி தளங்கள், திரைத்துறை, தயாரிப்பு நிறுவனங்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் என 240-க்கும் அதிகமானோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். பொய் செய்திகள், உள்ளடக்கத்தின் உண்மை நிலை, திரைப்பட தணிக்கை, ஓடிடி தளங்களுக்கான சுய கட்டுப்பாடு, உள்ளடக்க திருட்டு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இரண்டு மணி நேரம் நடைபெற்ற இணைய கருத்தரங்கில் விவாதிக்கப்பட்டது.

வரவேற்புரை ஆற்றிய தெற்கு மண்டல தலைமை இயக்குநர், டிஜிட்டல் ஊடக நன்னடத்தை விதி-2021-ன் முக்கிய அம்சங்கள் குறித்தும், பங்குதாரர்களுடனான உரையாடலுக்கான தேவை குறித்தும் விளக்கினார்.  பத்திரிகை தலைமை அலுவலகம், சென்னை, கூடுதல் தலைமை இயக்குநர் திரு எம் அண்ணாதுரை நெறியாள்கை செய்தார். பத்திரிகை தலைமை அலுவலகம், கேரளா, கூடுதல் தலைமை இயக்குநர் திரு வி பழனிச்சாமி, பத்திரிகை தலைமை அலுவலகம், கர்நாடகா, கூடுதல் தலைமை இயக்குநர் திருமிகு நடாஷா எஸ் டிசோசா மற்றும் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் தென் மண்டலத்தை சேர்ந்த மூத்த அதிகாரிகள் இதில் பங்கேற்றனர்.