ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 29 ஜூன் 2021 (14:54 IST)

ட்விட்டர் இந்தியா தலைமை நிர்வாகி உள்பட இருவர் மீது வழக்கு பதிவு - தவறான இந்திய வரைபட விவகாரம்

ட்விட்டர் நிறுவன இணைய தளத்தில் இந்திய படம் தவறாக சித்தரிக்கப்பட்டிருப்பதாகக் கூறி, இந்தியாவின் தலைமை நிர்வாகி மணிஷ் மகேஷ்வரி மற்றும் அம்ரிதா திரிபாதி மீது உத்தர பிரதேச மாநில காவல்துறை வழக்குப்பதிவு செய்திருக்கிறது.

இந்தியாவால் சர்ச்சைக்குரியதாக கருதப்படும் அந்த வரைபடத்தில், ஜம்மு காஷ்மீர் பகுதி இந்தியாவுடன் அல்லாமல் தனியாக பிரித்துக்காட்டப்பட்டிருந்தது.

ட்விட்டர் இணையதளத்தின் 'ட்வீட் லைஃப்' என்ற பகுதியில் இந்த வரைபடம் இடம்பெற்றிருந்தது. எனினும், குறிப்பிட்ட பயனர் இதை சுட்டிக்காட்டி கருத்து பகிர்ந்த விவகாரம் சமூக ஊடகங்களில் வைரலான பின்னர், இந்த வரைபடத்தை ட்விட்டர் நிறுவனம் நீக்கியிருக்கிறது.

இது தொடர்பாக பஜ்ரங் தளம் என்ற வலதுசாரி அமைப்பின் தலைவர் பிரவீண் பாட்டி அளித்துள்ள புகாரில், "உள்நோக்கத்துடன் கூடிய இந்த செயலை தேச துரோகமாக கருத வேண்டும்," என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும், ட்விட்டர் நிர்வாகிகள் மீது பகைமையை ஊக்குவிப்பது, சமூகங்கள் இடையே வெறுப்புணர்வை தூண்டுவது மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்ட விதிகளின் பிரிவுகள் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

டெல்லியில் இருந்து 100 கி.மீ தூரத்தில் உள்ள உத்தர பிரதேச மாநிலத்தின் புலந்தர்ஷா என்ற பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் இந்த புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பான தகவல், சமூக ஊடகங்களில் வைரலான நிலையில், தமது பெயர் முதல் தகவல் அறிக்கையில் இடம்பெற்றது குறித்து ட்விட்டர் நிறுவனத்தில் பணியாற்றும் அம்ரிதா திரிபாதி விளக்கம் அளித்துள்ளார். அதில், ட்விட்டர் இந்தியாவின் கன்டென்ட் பிரிவு அணியில் நீங்கள் நினைப்பது போல எனக்கு சிறப்பு அதிகாரம் கிடையாது என்று கூறியுள்ளார்.

தொடரும் சர்ச்சை

இந்தியாவில் சேவை வழங்கி வரும் சமூக ஊடக நிறுவனங்கள், அரசு சமீபத்தில் கட்டாயமாக்கியுள்ள புதிய சமூக ஊடக டிஜிட்டல் விதிகளுக்கு கீழ்படிய வேண்டும் என்று கூறப்பட்டது. இதற்கு இணங்கி நடக்க சமூக ஊடக நிறுவனங்கள் ஒப்புக் கொண்டாலும், வாட்ஸ்அப், ட்விட்டர் உள்ளிட்ட சில நிறுவனங்கள் தங்கள் தரப்பு சந்தேகங்களையும் தெளிவையும் கேட்டு டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன.

இதேவேளை, ட்விட்டர் சமூக ஊடக தளத்தின் பயனர்கள் சிலர் பகிரும் தகவல்கள் சர்ச்சைக்குரியவை ஆக இருப்பதால் அவற்றை நீக்கும் நடவடிக்கையில் ட்விட்டர் நிறுவனம் அலட்சியமாக நடந்து கொண்டதாக புகார்கள் கூறப்பட்டன.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு உத்தர பிரதேசத்தின் காஜியாபாதில் முதியவர் ஒருவரின் தாடியை சில மழிப்பது போன்ற சர்ச்சைக்குரிய காணொளி ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டது. அதை பகிர்ந்த சில பத்திரிகையாளர்கள், காங்கிரஸ் பிரமுகர்கள் சிலர் மீது உத்தர பிரதேச காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். அந்த வழக்கில், சில விஷமிகளின் ட்வீட்டுகளை சரிபார்க்காமல் அனுமித்த ட்விட்டர் நிறுவன செயல்பாடு, வகுப்புக்கலவரத்தை தூண்டும் செயல்பாடுகளுக்கு ஒப்பானது என்று காவல்துறை தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு ட்விட்டர் இந்தியா நிறுவன தலைமை நிர்வாகி மணிஷ் மகேஷ்வரிக்கு காவல்துறை அழைப்பாணை அனுப்பியது.

இந்த வழக்கில் காவல்துறையினர் தன்னை கைது செய்யாமல் இருக்க கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் இருந்து தற்காலிக நிவாரணத்தை பெற்றார் மணிஷ் மகேஷ்வரி. பெங்களூரு குடியிருப்புவாசியான மணிஷ், விசாரணைக்காக உத்தர பிரதேசம் செல்ல தேவையில்லை என்றும் அவரை விசாரிப்பதாக இருந்தால் காணொளி காட்சி வாயிலாகவே காவல்துறையினர் விசாரிக்கலாம் என்றும் நீதிமன்றம் கூறியது.

இதற்கிடையே, இந்திய சமூக ஊடக டிஜிட்டல் விதிகளை கடைப்பிடிப்பது தொடர்பான பணிகளை கவனிக்க இடைக்கால குறைதீர் அதிகாரியாக தர்மேந்திர சாதுரை ட்விட்டர் இந்தியா நியமித்திருந்தது. ஆனால், அவர் திடீரென தமது பணியில் இருந்து விலகினார்.

இதையடுத்து, தமது நிறுவனத்தின் சர்வதேச சட்டக்கொள்கை பிரிவு இயக்குநர் ஜெரமி கெஸ்ஸலை அரசு விதிகளில் கூறப்பட்டிருப்பது போல குறைதீர் அதிகாரியாக ட்விட்டர் நிறுவனம் திங்கட்கிழமை நியமித்தது.

ஆனால், அரசு விதிகளின்படி குறைதீர் அதிகாரி இந்திய குடியிருப்புவாசியாக இருக்க வேண்டும். இந்தியாவில் பகிரப்படும் எந்தவொரு சர்ச்சை இடுகைக்கும் சட்டபூர்வ பொறுப்பேற்பவராக இந்திய குடியிருப்புவாசியான நிர்வாகி இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்த விதி சேர்க்கப்பட்டது. ஆனால், ட்விட்டர் நியமித்த ஜெரமி கெஸ்ஸல் கலிஃபோர்னியாவைச் சேர்ந்தவர். அதனால் இந்த நியமனத்தை அரசு எவ்வாறு ஏற்கும் என்பது இன்னும் தெளிவாகவில்லை.