1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 9 ஜூன் 2018 (18:26 IST)

காவல் நிலையத்திற்குள் புகுந்து போலீசாரை கன்னத்தில் அறைந்த பாஜக எம்எல்ஏ: பெரும் பரபரப்பு

மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி அமைந்த இந்த நான்கு வருடங்களில் பாஜகவின் இரண்டாம் கட்ட, மூன்றாம் கட்ட தலைவர்கள் சர்ச்சைக்குள்ளான விஷயங்களில் அடிக்கடி மாட்டிக்கொள்வது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் இன்று பாஜக எம்.எல்.ஏ ஒருவர் காவல்நிலையத்திற்குள் புகுந்து போலீசார்களின் கன்னத்தில் அறைந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள பக்லி என்ற் தொகுதியின் எம்.எல்.ஏ ஆக இருப்பவர் பாஜகவை சேர்ந்த  சம்பலால் தேவ்டா. இவர் இன்று உதய்நகர் காவல் நிலையத்திற்குள் திடீரென புகுந்து அங்குள்ள போலீசார் ஒருவரை கன்னத்தில் மாறி மாறி அறைந்துள்ளார். இந்த காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது
 
சம்பலால் தேவ்டா எம்.எல்.ஏவின் மருமகனின் உறவினர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்ததாகவும், அவரை விடுதலை செய்யும்படி எம்.எல்.ஏ மருமகன் காவல்துறை அதிகாரியை மிரட்டியதாகவும், ஆனால் காவல்துறை அதிகாரி விடமுடியாது என்று கூறியதால், எம்.எல்.ஏவே நேரடியாக காவல்துறை அலுவலகம் வந்து அதிகாரியை அறைந்ததாகவும் தெரிகிறது.
 
இந்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் மிக வேகமாக பரவி வருவதால் பாஜாக எம்.எல்.ஏ மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் இதுகுறித்து சம்பலால் தேவ்டா எம்.எல்.ஏ கூறியபோது, எனது மகனும் மருமகனும் காவல்துறை அதிகாரிகளிடம் புகார் மனு ஒன்றை கொடுக்க சென்றதாகவும், அவர்களை காவல்துறையினர் அடித்ததால், தான் நேரடியாக சென்று தனது மகனை காப்பாற்றியதாகவும் கூறியுள்ளார்