பசுவுக்காக 5 பேரை அடித்தே கொன்றோம்..! – பகிரங்கமாக பேசிய பாஜக Ex-எம்.எல்.ஏ!
பசு மாட்டிற்காக ஐந்து பேரை அடித்துக் கொன்றதாக முன்னாள் பாஜக எம்.எல்.ஏ பேசியுள்ள வீடியோ வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
வட மாநிலங்கள் சிலவற்றில் பசு மாடுகளை இறைச்சிக்காக கொல்வது தடை செய்யப்பட்டுள்ளது. எனினும் பல சமயங்களில் மாட்டிறைச்சி கடத்தில் செல்வதாக கூறி வேற்று மதத்தினர் மீது இந்து மத அமைப்புகளை சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்துவது தொடர்கதையாக உள்ளது.
கடந்த 2012-17 வரை ராஜஸ்தானில் பாஜக ஆட்சி நடந்த சமயம் மாடுகளை கடத்தியதாக பலர் மீது வலதுசாரி அமைப்புகள் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் அடுத்ததாக ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தது.
இந்நிலையில் ராஜஸ்தானின் முன்னாள் பாஜக எம்.எல்.ஏ கியான் தேவ் அஹூஜா என்பவர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதில் அவர் “பசுவை கடத்துபவர்கள், இறைச்சிக்காக கொல்லுபவர்களை நாம் சும்மா விடக்கூடாது. இதுபோல செய்வதவர்கள் 5 பேரை அடித்தே கொன்றுள்ளோம். முதன்முறையாக நமது ஆட்களை அவர்கள் கொன்றுள்ளார்கள். எனவே நமது தொண்டர்களுக்கு நான் முழு சுதந்திரம் தருகிறேன். அவர்களுக்கு ஏதேனும் பிரச்சினை என்றால் சிறையில் இருந்து பெயிலில் எடுக்க நான் ஏற்பாடு செய்கிறேன்” என பேசியுள்ளார்.
இதனால் பெரும் வன்முறை சம்பவங்கள் ஏற்பட அஹூஜா மறைமுகமாக தூண்டுவதாக அவர் மேல் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த வீடியோ வைரலான நிலையில் அவர் மீது காவல்துறை 153ஏ பிரிவில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இதுகுறித்து பாஜக இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.