முதல்வரால் சஸ்பெண்ட் ஆன ஆசிரியைக்கு பிக்பாஸ் அழைப்பு
சமீபத்தில் உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த ஆசிரியர் ஒருவர் முதல்வர் திரிவேந்திர ராவத் தலைமையில் நடந்த பொதுமக்கள் குறை கேட்கும் கூட்டத்தில் பணிமாறுதல் கேட்டு விண்ணப்பம் அளித்தார். ஆனால் முதல்வர் இப்போதைக்கு பணிமாறுதல் செய்ய முடியாது என்று கூற, அதற்கு முதல்வரிடம் அந்த ஆசிரியை வாக்குவாதம் செய்தார். இதனையடுத்து அந்த ஆசிரியையை கைது செய்யவும் சஸ்பெண்ட் செய்யவும் முதல்வர் உத்தரவிட்டார்.
இந்த பிரச்சனை சமூக வலைத்தளத்தில் பயங்கர வைரலாக பரவியது. பணிமாறுதல் கேட்டால் கைது செய்வார்களா? என்று பொதுமக்கள் கொந்தளித்தனர். அந்த ஆசிரியையை போலீசார் விடுவித்துவிட்டாலும் இன்னும் சஸ்பெண்ட் உத்தரவு ரத்து செய்யப்படவில்லை
இந்த நிலையில் அந்த குறிப்பிட்ட ஆசிரியைக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியின் தயாரிப்பு நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது. ஒரே நாளில் இந்திய அளவில் புகழ் பெற்றுவிட்ட அந்த ஆசிரியை பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் நிகழ்ச்சி களை கட்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த ஆசிரியை பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மறுத்துவிட்டார். தனது குழந்தைகளை கவனித்து கொண்டு வீட்டோடு இருக்கவே விரும்புவதாக கூறி பிக்பாஸ் அழைப்பை அவர் மறுத்துவிட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.