யார் அந்த ஷாரூக்கான்? கேள்வி கேட்ட முதல்வர்! – இரவில் போன் செய்த ஷாருக்கான்!
அசாம் மாநிலத்தில் ஷாரூக்கானின் பதான் திரைப்படத்திற்கு எதிராக சிலர் வன்முறையில் ஈடுபட்ட நிலையில் அசாம் முதல்வருக்கு ஷாரூக்கான் போனில் பேசியுள்ளார்.
ஷாரூக்கான், தீபிகா படுகோன் நடிப்பில் சித்தார்த் ஆனந்த் இயக்கியுள்ள படம் பதான். இந்த படத்தின் பாடல் ஒன்றில் தீபிகா படுகோன் காவி நிற கவர்ச்சி ஆடை அணிந்திருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து பல மாநிலங்களில் இந்த படத்தை வெளியிட எதிர்ப்பு தெரிவித்து பலரும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அசாம் தலைநகர் கவுகாத்தியிலும் பதான் திரைப்படம் வெளியாகவிருந்து தியேட்டரில் பதான் பேனர்களை கிழித்து சில அமைப்புகள் கலவரம் செய்துள்ளன. இந்த சம்பவம் குறித்து அசாம் முதலைமைச்சர் ஹிமந்த பிஸ்வாஸிடம் பத்திரிக்கையாளர்கள் கேட்டபோது, தனக்கு ஷாரூக்கான் என்றால் யார் என்றே தெரியாது என்றும், பதான் படம் குறித்து தெரியாது என்றும் பேசியுள்ளார்.
அதன்பின் ஷாரூக்கான் அசாம் முதலமைச்சருக்கு போன் செய்து இந்த விவகாரங்கள் குறித்து பேசியுள்ளார். அதன் பின் ட்விட்டரில் பதிவிட்ட அசாம் முதல்வர் “பாலிவுட் நடிகர் திரு.ஷாரூக்கான் எனக்கு போன் செய்து இன்று காலை 2 மணிக்கு பேசினார். குவாஹாட்டியில் தனது படத்தின் திரையிடலின் போது நடந்த சம்பவம் குறித்து கவலை தெரிவித்தார். சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாப்பது மாநில அரசின் கடமை என்று நான் அவருக்கு உறுதியளித்தேன். நாங்கள் விசாரித்து, இதுபோன்ற அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் பார்த்துக் கொள்வோம்.” என்று தெரிவித்துள்ளார்.
Edit By Prasanth.K