என்னை விடுங்க நான் போகணும் – நடுவானில் விமான கதவை திறக்கப் போன பயணி
விமானம் நடுவானில் பறந்து கொண்டிருக்கும்போது கதவை திறந்து வாலிபர் ஒருவர் இறங்க முயற்சித்தது பயணிகளிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.
ஹைதராபாத்திலிருந்து கவுஹாத்திக்கு இண்டிகோ விமானம் ஒன்று பறந்து சென்றது. விமானம் நடுவானில் பறந்து கொண்டிருக்கும்போது வாலிபர் ஒருவர் எழுந்து சென்று கதவை திறக்க முயற்சி செய்திருக்கிறார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த விமான பணிப்பெண் உடனே அவரை தடுக்க முயற்சி செய்திருக்கிறார். இந்த சத்தம் கேட்டு மற்ற பயணிகளும் அவரை எப்படியோ சமாதானம் செய்து அமர வைத்திருக்கிறார்கள்.
பிறகு கவுஹாத்தி செல்ல வேண்டிய விமானம் பாதி வழியிலே புவனேஷ்வரில் தரையிறக்கப்பட்டது. விமான தள அதிகாரிகள் அந்த நபரை கைது செய்து அழைத்து சென்றனர். விசாரணையில் கதவை திறக்க முயன்றவர் பெயர் இர்ஷாத் அலி என்று தெரிய வந்துள்ளது. தனது தாயார் இறந்துவிட்டதால் கவுஹாத்திக்கு சென்றதாகவும், செல்லும் வழியில் மனநிலை கோளாறு ஏற்பட்டு இப்படி செய்ததாகவும் கூறப்படுகிறது. தற்போது அவரை அதிகாரிகள் மனநல பரிசோதனைக்கு புவனேஷ்வரில் அனுமதித்திருப்பதாக தெரிகிறது.
நடுவானில் விமானத்தின் கதவை திறந்து மிகப்பெரிய விபத்தை ஏற்படுத்த இருந்த சம்பவம் பயணிகளிடம் பீதியை ஏற்படுத்தியுள்ளது. பிறகு புவனேஷ்வரில் இருந்து கிளம்பிய விமானம் பத்திரமாக கவுஹாத்தி போய் சேர்ந்தது.