தொலைத்தொடர்பு கட்டிடத்தில் தீ: 84 பேர் பத்திரமாக மீட்பு
மும்பையில் உள்ள அரசுக்கு சொந்தமான தொலைத்தொடர்பு நிறுவனத்தின் 9 மாடி கட்டிடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அதில் பணியாளர்கள் 84 பேர் சிக்கிக் கொண்டனர்.
மத்திய அரசின் எம்.டி.என்.எல் என்ற தொலைத்தொடர்பு சேவை நிறுவனத்தின் 9 மாடி கட்டிடம் மும்பையில் உள்ளது. நேற்று ஊழியர்கள் வழக்கம்போல தங்களது பணிகளை மேற்கொண்டு வந்திருக்கின்றனர். அப்போது திடீரென 3 வது மாடியில் தீ பற்றியது. அடர்த்தியான கரும்புகை எல்லா பக்கமும் பரவியுள்ளது. பதறியடித்து ஊழியர்கள் பலர் கீழே இறங்கி ஓடியிருக்கின்றனர். மளமளவென எரிந்த தீ 4 வது மாடிக்கும் பரவியிருக்கிறது. இதனால் ஊழியர்கள் சிலர் மொட்டை மாடி பகுதிக்கு தப்பித்து சென்றுள்ளனர்.
சம்பவமறிந்த தீயணைப்பு துறையினர் 14 தீயணைப்பு வாகனங்களோடு விரைந்தனர். வேகமாக செயல்பட்டு தீயை அணைத்ததுடன் கட்டிடங்களில் சிக்கி தவித்த ஊழியர்களையும் காப்பாற்றினர். கட்டிடத்தில் புகையில் சிக்கி கொண்டவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் பொருட்சேதம் ஆகியிருந்தாலும் உயிர் சேதம் எதுவுமில்லாமல் அனைவரும் மீட்கப்பட்டனர். மின்கசிவினால தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. எனினும் இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.