வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வியாழன், 13 அக்டோபர் 2016 (15:58 IST)

அதிர்ச்சித் தகவல்! - இந்தியாவில் 13.7 சதவீத மக்களுக்கு மனநலம் பாதிப்பு

இந்தியாவில் சுமார் 15 கோடி மக்களுக்கு மனநல பாதிப்புக்கு உள்ளாகி உள்ளதாக ஆய்வு ஒன்று அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
 

 
நாடு முழுவதும், தேசிய மனநல கழகம் மற்றும் நரம்பியல் துறை சார்பில் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. இதில் சுமார் 13.7 சதவீதம், அதாவது 15 கோடி இந்தியர்கள் பல்வேறு விதமான மனநல பாதிப்புக்களால் அவதிப்பட்டு வருவது தெரிய வந்துள்ளது.
 
மனநலம் பாதிக்கப்பட்டவர்களில் 80 சதவீதம் பேர், ஓராண்டுக்கு மேல் ஆகியும் எந்த சிகிச்சையும் எடுத்துக் கொள்ளாமல் உள்ளனர். 40 முதல் 49 வயதுடைய பெண்களே மனஅழுத்தத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 
18 வயதிற்கு கீழுள்ள 22.4 சதவீதம் பேர் போதை உள்ளிட்ட பல்வேறு பொருட்களை அதிகம் பயன்படுத்தியதால் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 
ஒட்டுமொத்த காரணங்களையும் ஆராய்கையில் 13.9 சதவீத ஆண்களும், 7.5 சதவீத பெண்களும் மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
 
இளவயதினரிடையே 13 முதல் 17 வயதிற்கு உட்பட்டவர்களில் 7.3 சதவீதம் பேர் மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
 
பொருளாதார நெருக்கடியே பிரதானம்:
 
பொருளாதார நெருக்கடி, வேகமான வாழ்க்கை முறை போன்ற பல்வேறு காரணங்களால் மனநல பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். இவர்களில் பொருளாதார காரணங்களால் ஏற்பட்ட மனஅழுத்தத்தால் மனநலம் பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கையே அதிகம்.