வெள்ளி, 8 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. நாடாளுமன்ற தேர்தல் 2024
Written By Senthil Velan
Last Updated : திங்கள், 8 ஏப்ரல் 2024 (18:49 IST)

அதிமுக திட்டங்களை முடக்கிய திமுக..! இரட்டை வேடம் போடும் பாஜக...! இபிஎஸ் கடும் விமர்சனம்..!!

Edapadi
அதிமுக கொண்டு வந்த திட்டங்களை திமுக முடக்கியதாகவும், கச்சத்தீவு விவகாரத்தில் பாஜக இரட்டை வேடம் போடுவதாகவும் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.
 
ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஜெயபெருமாளை ஆதரித்து எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், வேளாண்மை, மீன்பிடித் தொழில் சிறக்க அதிமுக ஆட்சியில் திட்டங்கள் கொண்டுவரப்பட்டதாக தெரிவித்தார்.
 
காவிரி - குண்டாறு உள்ளிட்ட அதிமுக கொண்டு வந்த திட்டங்களை திமுக முடக்கியதாக அவர் குற்றம் சாட்டினார். முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த அதிமுக நீதிமன்றத்தை  நாடி தீர்ப்பு பெற்றது என்றும் முல்லை பெரியார் மூலம் ராமநாதபுரத்திற்கும் நீர் கிடைக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.
 
கச்சத்தீவை இலங்கைக்கு இந்தியா தாரை வார்த்ததால் மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் மீனவர்களின் உடமைகளை நீக்கவும், துயரை துடைக்கவும் கச்சத்தீவை மீட்டெடுக்க வேண்டும் என்றும் கூறினார்.

 
கச்சத்தீவை மீட்க ஜெயலலிதா கடிதம் மூலமும், நேரிலும் மத்திய அரசிடம் வலியுறுத்தியதை அவர் நினைவு கூர்ந்தார். ஆனால் மீனவர்களைப் பற்றி கவலை கொள்ளாத பாஜக அரசு, தேர்தல் நேரத்தில் கச்சத்தீவு விவகாரம் பற்றி பேசுவது ஏன் என்று எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பினார்.