வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. நாடாளுமன்ற தேர்தல் 2024
Written By Senthil Velan
Last Updated : செவ்வாய், 26 மார்ச் 2024 (15:31 IST)

ஓபிஎஸ் என்ற பெயரில் 5 பேர் வேட்பு மனு தாக்கல்..! ரியல் ஓபிஎஸ்க்கு சிக்கலா..?

ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் வேட்பு மனு தாக்கல் செய்த நிலையில், ஓபிஎஸ் என்ற பெயரில் மேலும் 4 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இதனால் வாக்காளர்கள் மத்தியில் குழப்பம் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
 
பாஜக கூட்டணியில் இடம்பிடித்துள்ள முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ராமநாதபுரம் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.   அவர் நேற்று தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.
 
இதே தொகுதியில் திமுக கூட்டணியில் உள்ள இந்திய யூனியன் முஸ்லீம் லீக் வேட்பாளர் நவாஸ் கனியும்,  அதிமுக வேட்பாளராக ஜெயபெருமாளும் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்திருக்கின்றனர்.
 
இந்த சூழலில் ராமநாதபுரம் தொகுதியில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள மேக்கிழார்பட்டியைச் சேர்ந்த ஓச்சப்பன் என்பவர் மகன் பன்னீர்செல்வம் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.
 
அதேபோல்   ராமநாதபுரம் அருகே உள்ள தெற்கு காட்டூர் பகுதியைச் சார்ந்த ஒய்யாரம் மகன் ஓ. பன்னீர்செல்வம் என்பவரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். மேலும் இரண்டு பேர் ஓ.பன்னீர்செல்வம் என்ற பெயரில் இன்று வேட்பு  மனு தாக்கல் செய்தனர். இதனால் ராமநாதபுரத்தில் ஓ பன்னீர்செல்வம் என்ற பெயரில் 5 பேர் போட்டியிடுகின்றனர்.

 
இதனால் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. வாக்காளர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தவே முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பெயரிலேயே மேலும் 4 பேரை திமுக கூட்டணி களமிறக்கி இருப்பதாக ஓபிஎஸ் தரப்பினர் குற்றம் சாட்டி வருகின்றனர்