அத்வானிக்கு சீட் கிடையாது – பாஜக எடுத்த அதிரடி முடிவு !
பாஜகவின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியாகியுள்ள நிலையில் அதில் அத்வானி போட்டியிடும் தொகுதியில் அமித் ஷா நிறபார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பாஜகவில் மோடியை ஒரு மிகப்பெரிய தலைவராக மாற்றியதில் அத்வானிக்கு மிகப்பெரிய பங்குண்டு. அதேப்போல மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிப்பதற்கும் அத்வானி மிகப்பெரிய அளவில் அழுத்தம் கொடுத்தார். ஆனால் மோடி பிரதமரான பின்பு அத்வானியை ஒதுக்க ஆரம்பித்தார். இதனால் கட்சியில் இருந்தே அத்வானி ஓரங்கட்டப்பட்டார்.
இந்நிலையில் நேற்று பாஜகவின் முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் நேற்று வெளியாகியுள்ளது. 20 மாநிலங்களில் போட்டியிடும் 184 வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. அதில் சில அதிரடி முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. பாஜகவின் மூத்த தலைவருமான எல்.கே.அத்வானி வழக்கமாகப் போட்டியிடும் குஜராத் காந்தி நகர் தொகுதியில் இம்முறை பாஜக தலைவர் அமித் ஷா போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேப் போல மோடியும் தனது குஜராத் தொகுதியில் போட்டியிடாமல் வாரணாசி தொகுதியில் போட்டியிடுவார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்வானி தொகுதியில் அமித் ஷா நிற்பார் என அறிவிக்கப்பட்டிருப்பது அத்வானியை அவமரியாதை செய்யும் விதமாக உள்ளது எனக் கூறப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் 75 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குப் போட்டியிடும் வாய்ப்பு அளிக்கப்படாது பாஜக உயர்மட்டக் குழுவில் முடிவெடுக்கப்பட்டதாகச் செய்திகள் வெளியாகின என்பது குறிப்பிடத்தக்கது.