வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 22 மார்ச் 2019 (09:04 IST)

நீரவ் மோடியின் சொத்துகள் விற்பனை – அதிரடி முடிவு !

லண்டனில் கைது செய்யப்பட்டுள்ள வைர வியாபாரி நீரவ் மோடியின் சொத்துகளை விற்பனை செய்ய அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளது.

பிரபல வைர வியாபாரி நீரவ் மோடியும், அவரது உறவினர் மெஹுல் சோக்சியும், மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கிக் கிளையில் 13 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் கடன் பெற்று, அதை திரும்ப செலுத்தாமல் வெளிநாடு தப்பிச் சென்றுவிட்டனர்.

நீரவ் மோடி தப்பிச் சென்ற பிறகு போலீசுக்கு மோசடி விவகாரம் தெரிய வந்தது. இந்நிலையில்  அமலாக்கத்துறை  நிரவ் மோடியை தேடி ஆரம்பித்தது. நீரவ் மோடி பிளாஸ்டிக் சர்ஜரி செய்து, முரட்டு மீசையை வளர்த்துக் கொண்டு லண்டனில் வைர வியாபாரம் செய்து வருகிறார். இந்த செய்தியை பிரிட்டனின் டெய்லி டெலிகிராப் வெளியிட்டு உள்ளது.லண்டனில் நிரவ் மோடி, புதிதாக வைர வியாபாரத்தை தொடங்கியுள்ளதுடன், தாம் வசிக்கும் பகுதிக்கு அருகிலேயே அலுவலகமும் வைத்துள்ளதாகவும் டெய்லி டெலிகிராஃப் தெரிவித்துள்ளது. நிரவ் மோடி வசிக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பின் வாடகை மாதத்திற்கு 16 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்  என டெய்லி டெலிகிராஃப் கூறியுள்ளது. 

இதையடுத்து லண்டனில் வைத்து ஸ்காட்லாந்து யார்டு போலீஸ் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரைச் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவருக்கு ஜாமீன் கொடுக்கவும் நீதிபதிகள் மறுத்துள்ளனர். மார்ச் 29ஆம் தேதி வரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. லண்டனில் இருந்து அவரை நாடு கடத்தும் முடிவில் உள்ளது இந்திய அரசு.

நீரவ் மோடியிடமிருந்து மோசடிப் பணத்தை வசூலிக்கும் பொருட்டு, அவரது சொத்துகளை விற்பனை செய்யும் நடவடிக்கையில் அமலாக்கத் துறையினர் இறங்கியுள்ளனர்.  அதனால் அவரது சொத்துகளில் சிலவற்றை விற்க அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளது. அதனால் அவருக்கு சொந்தமான விலையுயர்ந்த 173 ஓவியங்கள் மற்றும் ரோல்ஸ் ராய்ஸ், போர்சே, பென்ஸ் உள்ளிட்ட விலையுயர்ந்த 11 கார்களை விற்பனை செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான விற்பனை ஏலம் இந்த மாத இறுதியில் நடைபெறும் என்று அமலாக்கத் துறையினர் அறிவிப்பு விடுத்துள்ளனர் இதற்கான ஒப்புதலை மும்பை நீதிமன்றம் அளித்துள்ளது.