இந்த உலகில் எத்தனை வசதிகொண்டவர்களுக்கும், ஒரு பரம ஏழைக்கும் ஒரு இழப்பும், ஒரு மீட்சியும் கிடைக்கவே செய்கிறது.
நாம் நினைத்தது எல்லாம் நடக்கும் என்ற ஆசை எல்லோர் மனதில் நீரில் மீனைப் போல் எப்போதும் துள்ளல் மனோபாவத்துடந்தான் இருக்கிறதென்றாலும், ஒரு சிலருக்குத்தான் தான் நினைத்ததை நடத்திக்காட்டுகிற சக்தியும் வல்லமையும் இருக்கிறது.
தண்ணீரில் தீப்பற்றாது.
நெருப்பில் வானவில் தோன்றாது.
ஆனால், தீயை நீர் அணைத்துவிடும். அதேபோல், எளிதில் தீப்பற்றுகிற பெட்ரோல் சாலையில், சிந்துகிறபோது, நீர்பட்டால், அங்கு வானவில்லின் நிறம் தோன்றுகிறது.
வானத்தை மறைக்கும் மேகத்தை அசைக்கின்ற காற்றின் வலிமை ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கிறது.
ஆனால், அதைக் கண்டடைந்து தன் ஆற்றலைத் தேவையறிந்து இயக்குபவர்களால், எல்லாம் செய்திடக்கூடிய வல்லமை தானாகவே வருகிறது.
ஓரிழப்பை ஒரு எழுச்சியின் மூலம் சரிக்கட்டிவிட முடியும்.
விருப்பப்பட்ட ஒன்றை இழக்கும்போது, உண்டாகும் கவலையை எந்தச் செல்வத்தைக் கொட்டிக் கொடுத்தாலும், அந்த விருப்பத்தை நேரில் சந்தித்தபோது, கொண்ட மகிழ்ச்சிக்கு இணையாகக் கொண்டாட முடியாது.
ஒரு பெரும் பக்குவத்தை வளர்த்துக்கொண்டால், நமக்குண்டான இழப்பினால் நாம் பாதிப்பிற்குள்ளாக மாட்டோம்!
ஒரு குளத்தில் நீரருந்த வந்த ஒரு காகம், தான் குடிக்கப் போதுமான நீரிருந்தும், அதைக் குடிக்காமல், தன் குழந்தையை முதலில் நீர் குடிக்கும்படி கூறியது. நீண்ட தூரம் வந்த கலைப்புவேறு அதன் ஒவ்வொரு சிறகுகளிலும் நடுங்கத்தை உண்டாக்கித் தாகத்தைப் பெருக்கெடுக்க வைத்தாலும் தானீன்ற பறவைக்கு முதலிடம் கொடுத்தது.
அந்த நீரில் விஷமிருந்ததாகத் தெரிகிறது. அந்த நீரைக் குடித்த மாத்திரத்தில், அது உயிரிழந்தது.
அதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த தாய் காக்கை, தன் கணவருக்கு என்ன பதில் சொல்வது? இப்படி குழந்தையைக் கொன்றுவிடவா உன்னுடம் அனுப்பினேன் என்று கேட்டால் என்ன செய்வது என்று பதறிக்கொண்டே சென்றது.
அது கூட்டை அடைந்ததும், தயங்கி தயங்கி உள்ளே சென்றது….. உள்ளே ஆண்காகம் ஒரு குட்டிக் காகத்திற்கு உணவூட்டிக் கொண்டிருந்தது.
இதைப் பார்த்து, இது யார் குழந்தை என்று கேட்டது தாய் காகம். நான் வரும் போது, ஒரு மரத்தை மனிதர்கள் வெட்டி சாய்த்துக் கொண்டிருந்தனர். அதில் வசித்த மற்ற பறவைகள் உயிரிழந்த நிலையில், இதுமட்டுமே உயிருக்குப் போராட்டியது, நான் பறக்கும்போது, கண்ணில்பட்டதால், இதை நம் கூட்டிற்குக் கொண்டு வந்துவிட்டேன் என்று கூறி, அது சரி நம் குழந்தை எங்கே என்று கேட்டது.
அங்கு நடந்த துயர சம்பவத்தைக் கூறியது.
அப்போது, ஆண் காகம் அழுதுகொண்டே, நம் குட்டிக் காகத்திற்கு ஒரு நோயிருந்தது, அது உனக்குத்தெரியாமல் எனக்குள்ளே வைத்திருந்தேன். அது இன்னும் சில நாட்கள் மட்டும்தான் உயிர்வாழும் என்று மூத்த காக்கைகள் என்னிடம் கூறினர். அதற்குள் அதன் முடிவை அதுவே தேடிக் கொண்டது. அல்லது நாம் தேட விட்டுவிட்டோம்.
ஒருவேளை, நம் குட்டிக்காகம் இறந்த ஆன்மா தான் இந்தக் காகத்தைக் காப்பாற்றும்படி என்னிடம் பேசியிருக்கும் என்று கூறியது.
அதையே தாய்க் காகமும் ஒப்புக்கொண்டது.
இருவரும் அந்தப் புதிய பறவையைத் தங்கள் குழந்தையைப் போல் வளர்க்க நினைத்தனர்.
இந்தக் கதையைப் போல் எல்லாம் நன்மைக்கே என்று உணரும்போது, துயரங்கள் வந்து நம் நெஞ்சை அடைக்கப்போவதில்லை. நாமும் கவலையுறப் போவதில்லை.
எல்லாம் நன்மைக்கே!
தொடரும்….
#சினோஜ்