1. ப‌ல்சுவை
  2. இலக்கியம்
  3. கட்டுரைகள்
Written By சினோஜ்
Last Updated : சனி, 12 நவம்பர் 2022 (00:10 IST)

ஏழை தாயின் காணிக்கையும் இயேசுவின் திருமொழியும்!- சினோஜ் கட்டுரைகள்

jesus sinoj articles
உலகின் பரவலான மதங்களில் ஒன்றாகக் கிருஸ்தவ மதமும் அறியப்படுகிறது. இதையொரு மார்க்கமென்றும் சமய அறிஞர்கள் கூறி வருகின்றனர்.

800 கோடியை நெருங்கி வரும் உலக மக்கள் தொகையில், சுமார்  220 கோடிப் பேர்  கிருஸ்தவ மதத்தைச் சார்ந்தோராக அறியப்படுகின்றனர்.  இது உலக மக்கள் தொகையில் 32% சதவீதம் ஆகும்.

இப்படி, அன்பும், அருளும், அஹிம்சையும்  போதித்து, ''தன்னை ஒரு கன்னத்தில் அடிப்பவர்களையும் நேசிக்கக் கற்றுக்கொடுத்த'' இயேசுவின் பெயர் உலகின் எல்லா மூலைமுடுக்குகளிலும் குக்கிராமங்களில் உச்சரிக்கப்படுகிறது. இதற்கு, ஆங்கிலேயர்களும், ஐரோப்பியர்களும், இம்மதத்தைப் பரப்ப கீழை  நாடுகளைத் தன் காலணியாதிக்கத்தின் கீழ் கொண்டுவந்தபோது, அவர்கள் எடுத்த ஒரு உத்தியாகவும் இது பார்க்கப்படுகிறது.

ஆனால், இந்தியா போன்ற நாடுகளில் சாதிக்கொடுமைகள் தீப்போல் மக்களைச் சுட்டுக்கொண்டிருந்த போது, அவர்களுக்கு ஆறுதல் அளித்து, அவர்களுக்குக் கல்வியைப் போதிக்க ஆரம்பித்ததும் இதே மதத்தின் பெயரால்தான்.

தம்மைச் சவுக்கால் அடித்துச் சாவில்  விழும்பிற்குக் கொண்டு செல்லும் முன் ஈவிரக்கமேயின்றி சிலுவையை நெடுதூரம் தூக்கிச் சுமக்க வைத்தபோதிலும், சிலுவையில் மரணிக்கும் தருவாயில் தாகத்திற்கு நீர் கேட்டபோது, கசப்பு நீரைக் கொடுத்து, வயிற்றின் ஒருபக்கத்தை ஈட்டியால் குத்தி ரத்தத்தைப் பூமியில் சிந்திவிடச் செய்த கொடூரப் போர்வீரர்களுக்கும்கூட ''பிதாவே தாங்கள் செய்வது  இன்னதென்று அறியாதிருக்கிறார்கள்! இவர்களை மன்னியும்'' என்று கூறிய இயேசு அன்று மரித்து மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்து தேவனுடைய சித்தத்தின்படி, பரிசுத்த ஆவியானவராக கிரிஸ்தவர்களால்  நம்பப்படுகிறது. இது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் நடந்ததாயினும், இன்னும் அனேக மக்களால் தங்கள் வாழ்க்கையில் நடந்ததுபோல் ஒரு ஒப்பீடு செய்யப்படுகிறது.

இப்படித் தன்னை வருத்திக்கொண்டு மக்களின் பாவங்களுக்காக மரணித்துப் பின் உயிர்த்தெழுந்தவரை கடவுளாகக் கொண்டாடுவதில் கிறிஸ்தவர்களுக்கு அத்தனை பெரிய ஆனந்தம்.

இதனால்தான், வேதாகமத்தில், யோவான் சுவிஷேசத்தில், இயேசுவின் மரணம் என்பதது ஒரு தோல்வியாக அன்றி வெற்றியின்  நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.  எனென்றால் இயேசு சிலுவையில் உயர்த்தப்பட்டார்.

தானிறந்த பின், உயிர்த்தெழுந்து, ஆவியுடம் அசைவாடிக் கொண்டிருப்பதாக கிருஸ்தவர்களின் நம்பிக்கை வழிவழியாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.

அந்த இயேசுவின் வாழ்க்கைக் காலம் குறுகியதாக இருந்தாலும், உலகக்  இருக்கும்மட்டும் அது ஆலய ஆராதனை வழியிலும், சுவிசேஷ பிரசங்கங்களிலும் உயிர்ப்புடன் அவரது அதிசயங்களும் அற்புதங்களும் அவரது அடையாளமாகவே  போற்றப்பட்டுவருகிறது.

மத்தேயு என்றால் யாவேயின் பரிசு என்று அர்த்தம்; யாவே என்றால் 'வாழ்தல்', 'இருந்தல்' என்று பொருள்படுகிறது.

இந்த 'மத்தேயு'ம் இயேசுவின் பனிரெண்டு சீடர்களில் ஒருவர். இவர் இயேசுவின் உயிர்த்தெழுதலுக்குச் சாட்சியாக இருந்து, 15 ஆண்டுகள் யூதர்களுக்கு இவர்  நற்செய்தியைப் பல தேசங்களுக்குச் சென்று  பகிர்ந்துள்ள படியால் அவரது பெயரில் பைபிளில் ஒரு அதிகாரம் இடம்பெற்றுள்ளது.

இயேசு தேவாயலத்தில் உபதேசம் செய்துமுடித்த பின், காணிக்கைப் பெட்டிக்கு எதிராக உட்கார்ந்திருந்தார்.

அப்போது, மக்கள் காணிக்கைப் பெட்டியில் காணிக்கை போட்டுக் கொண்டிருந்தனர். அதிக வசதிபடைத்தோர் அதிகத்தொகை போட்டனர். மற்றவர்கள் தங்களிடம் இருந்ததைப் போட்டனர்.

ஒரு ஏழை விதவைத் தாயும் தன்னிடமிருந்த இரண்டு காசைப் போட்டார். இதைப்பார்த்த இயேசு, இந்த ஏழைப் பெண் மற்ற எல்லாரைப் பார்க்கிலும் அதிகமான காணிக்கை போட்டாள் என்று கூறினார்.

அதாவது, மற்றவர்கள் தங்களிடம்  அள்ள அள்ள குறையாமல் இருந்தாலும் கிள்ளிப் போட்டனர். ஆனால் இவரே ''வறுமையில் இருந்தபோதிலும், ஜீவனத்திற்கு உண்டாயிருந்ததெல்லாம்  முழுவதுமாகப் போட்டாள்'' என்று கூறினார்.

நம்மிடம் எது உள்ளதோ அதிலிருந்து அவருக்கு முழுமையாகக் கொடுப்பதில் கடவுள் திருப்தி காண்பார் என்பது இதிலிருந்து அறியமுடிகிறது.


                                                                                                                தொடரும்...
 
#சினோஜ்