வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. இலக்கியம்
  3. கட்டுரைகள்
Written By சினோஜ்
Last Updated : வியாழன், 10 நவம்பர் 2022 (23:25 IST)

''விடாமுயற்சியின் விளைவுகள்''- சினோஜ் கட்டுரைகள்

success
மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் தன்னம்பிக்கையூட்டுகின்ற கட்டுரைத்தொடர் இது. தொடர்முயற்சிகளினால் எதையும் சாதிக்க முடியும்! சாதிப்பதற்குப் பணம் ஒரு பொருட்டல்ல என்பதை விளக்கும் நம்பிக்கைத்தொடர்!
 
நம் மூச்சுக்காற்றடித்தாலே ஆடிப்போய் , உதாசீனப்படுத்துகிற நுனிப்புல் முதல் உலகின் மிகப்பெரிய மரமான ஜெனரல் ஷெர்மன் மரம் வரையிலான ஓரறிவுள்ளவற்றின் மீதுகூட ஆகாயச்சூரியனின் கதிர்கள் விழுகிறது.
 
சொர்க்கதேவதை மாதிரி வானத்தில் மிதந்துகொண்டிருக்கிற மேகங்கள் கூட உப்புக் கடலிலும், பூமித்தரையிலும்  என்றாவது ஒரு நாள் சுற்றுலாவுக்கு வந்தததைப் போல் தரையிறங்குகிறது.
 
இந்த உலகில் எந்தத் துறையிலும் ஜாம்பாவானாக  இருக்கிறவரும் கூட தன் வாழ்க்கை எனும் கப்பலை  ஒரு முறையாவது தோல்வியென்ற தரைதட்டும் அனுபவத்தைப் பெற்றிருக்கலாம்.
 
இந்திரன் மாதிரி செல்வச் செழிப்பில் இருந்தவர் கூட வறுமையின் கோரப்பிடியிலும், அரசு வகுத்துள்ள வறுமைக்கோட்டை ஒட்டித் தன் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கலாம்.

victory
அதேபோல், இந்தச் சமுதாய நிலத்தில் ஒரு  புழுவாகப் பார்க்கப்பட்டவர்கள் எல்லாம், புரட்சிப் புயலாக அவதாரம் எடுக்க அவமானம் என்ற உரத்தைத் தன் நெஞ்சில் தாங்கிக் கொண்டு, பல ஏற்றத்தாழ்வுகளைச் சந்தித்து, வாழ்க்கைப் பயணத்தில்  நெடுந்தூரம் சென்று, தன்னுழைப்பால் உச்சம் தொட்டிருக்கலாம்.
உலகிலுள்ள நாடுகளில் எங்காவது ஒரு மூளையில், படிக்காமல் சாதிக்கத் துடிப்பவனும்;பள்ளியில் படிக்கும் காலத்தில், பிற்காலத்தில் மிகச்சிறந்த தத்துவமேதையாக மாறிய லுட்வக் வின்டெஜ்டினைவிட இரண்டு வகுப்புகள் கூடுதலாகப் படித்தவரும், ஓவியக்கலையில் தேர்ந்தவருமான ஹிட்லர்  யூதர்களை அழிக்கத் துடித்த மாதிரி  தான் வாழும் சமூதாயத்தையே அழிக்கத் துடிப்பவர்களும்  ஒரே உலகில்தான் வசிக்கிறார்கள்.
 
இந்தச் சமூகத்தை கர்ணனின் கண்ணோட்டத்தில் பார்ப்பவனுக்குக் குறைகளும் நிறைவாய்த் தெரிகிறது; அதைத் துரியோதனைக் கண்களின் பார்ப்பவருக்கு நிறைவும் குறைவாய்த் தெரிகிறது.

இதெல்லாம் உள நோக்கமும், செயல் திட்பமும் இச்சமூகத்தைச் சார்ந்துள்ள ஒரு மனிதனைக் கட்டமைக்கின்ற இவ்வுலகில் இருந்துதான் ஒருவனுக்குள் உண்டாகிறது என்பதை நம்மால் மயிரிழையளவுகூட மறுக்கமுடியாது.
 
வெற்றியின் அளவைத் தீர்மானிப்பது போட்டிகளாக இருக்கும் பட்சத்தின் அதை வென்றாக வேண்டியதற்குத் தயாராகும் மனிதனுக்கு, அவனுக்கு விவரம் தெரியும் காலந்தொட்டு, அவர் கட்டைக்கால்விரல்களைச் சேர்த்துக் கட்டும் காலம் வரைக்கும் தொடர்ந்து வந்து கொண்டுருதானிருக்கிறது.
 
ஒருவன் படிக்காமல் சாதித்துவிட முடியுமென்ற தன்னம்பிக்கையைக் கொடுக்கும் இதே உலகம்,  நீ எதைப் படித்தாலும் என்ன படித்தாலும் உன்னால் ஒன்றும் செய்ய முடியாதென்று நச்சுவார்த்தைத் துளிகளைத் தன் வாய்க்கமண்டலத்திலிருந்து உதிர்க்கிறவர்களுக்கு வாழ்க்கையின் மீது இப்படி பிடி இல்லாமல் போனதெப்படி?
 
அவர்கள் சந்தித்த தோல்விகளா?
 
அவர்கள் அப்படிச் சந்தித்த தோல்விகளில் இருந்து எப்படி எடிசனைப் போன்று ஒரு புதிய அனுபவத்தையும், ஒவ்வொரு தவறுகளிலிருந்தும் ஒரு படிப்பினைகளைப் பெறமுடியாமல் போனது?
 
வாழ்க்கையைத் தேரை வடம்பிடிக்கத் தெரியாதவர்களிடம் எப்படி வெற்றிக் கடவுள் வந்து சந்ததோசம் எனும் சப்பரத்தின் மீது உட்கார்ந்து நம் வாழ்த்த முடியும்?
 
இதெல்லாம்   நேர்மறைக்கண்ணோட்டத்துடன் வாழ்க்கையை அணுகாமல் இருப்பதுதான் என்று என் கருத்து.
Polar Bears
எதைத் தின்றால் பித்தம் தெளியும்? என்பது போல், நம்மிடமுள்ள எதிர்மறைச் சிந்தனைகளையும், இதைக் கூறுபவர்களின் சொற்களையும் காற்றையெதிர்த்து வானில் பறக்கும் பறவையின் சிறகுகள் போல் கடந்து செல்ல வேண்டும்.
 
அப்படியே அடுத்தவர்கள் சொல்வதைக் கேட்பதாக இருந்தால் நேர்மறைச் சொற்களையும் நேர்மறையாளர்களின் பேச்சுகளையும், சாதித்தவர்களின் வரலாற்றையும், வெற்றியாளர்களின் நெறிகளையும் கேட்டுத் தெரிந்து கொள்வோம்.
 
அதுவே நமக்கு முன்னத்தி ஏராக இருந்து வழிகாட்டும்.
 
வாழ்வில் எத்தனை சோதனை வந்தாலும், எதிர்ப்புகள் வந்தாலும், தோல்விகள் உக்ரைன் மீதான ரஷிய போர் போல் தொடர்ந்து வந்தாலும், நமது மன வலிமையால் அதையெதிர்த்துக் கொண்டு  கடலலைகளைபோலச் செல்ல வேண்டும்.
 
''ஒரு நாள், தன் வசிப்பிடம் நோக்கி,  தாய் பனிக்கரடியுடன் அதன் குட்டியும் சென்று கொண்டிருந்தது. அப்போது, ஒரு பள்ளத்தையொட்டிச் சென்றுகொண்டிருந்த குட்டி கீழே சரிக்கி விழுந்துவிட்டது. தாய்க் கரடி கதறுகிறது…குட்டியோ பரிதவிக்கிறது. எப்படியாவது தாயிடம் சேர்வேண்டுமென குட்டி அங்கும் இங்கும் அலைந்து, எப்படியாதும், பள்ளத்திலிருந்து மேலே ஏறி பலமுறை முயன்று உச்சியைத் தொடும்போது, ஓரிருமுறை கீழே சரிக்கிவிழும். ஆனாலும், அதன் முயற்சி அதனுள் இருக்கும் ரத்தத்தைவிட சூடாக இருந்து கொதித்திருக்கும்போலும். மீண்டும் தாயுடன் சேர வேண்டி, தாயின் முகத்தைப் பார்க்க வேண்டி, அடித்துப் பிடித்து இதற்கு முன் காலிடறிய பகுதிகளில் கால் வைக்காமல்,சூதனமாகப் பார்த்து, பார்த்து அதேசமயம் விவேகத்துடன் ஒரே மூச்சில்  நம்பிக்கையை உள்வாங்கிக் கொண்டு மேலே சென்று,  உச்சியைத் தொட்டு, தாயின் கரத்தை முத்தமிட்டது.
தாயும் ஆரத்தழுவிக் கொண்டது.
 
தாயும் சேயும் ஒருசேர கட்டியணைத்தபடி வசிப்பிடம் நோக்கிச் சென்றனர்.''
 
ஒரு குட்டியால் முடிந்த முயற்சியை நாம் குழந்தைகளிடம் இருந்து கற்பிப்போம்!''
 
விடாமுயற்சியின் விளைவுகள் வாழ்வை விஷ்வரூபமாக்கும் வல்லமை கொண்டவையாகும்.
.
தொடரும்....

#சினோஜ்