ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. இந்திய வகைகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 5 ஜனவரி 2024 (12:24 IST)

எதிர்ப்பு சக்தி அளிக்கும் சூப்பரான பூண்டு, மிளகு சாதம் செய்வது எப்படி?

Garlic Pepper Rice
தமிழ் பாரம்பரிய சமையலில் முக்கியமான பங்கு வகிக்கும் மருத்துவ குணம் மிக்க பூண்டு, மிளகு கொண்டு சத்தான சாதம் செய்வது எப்படி என பார்ப்போம்.


 
தமிழகத்தின் பாரம்பரியமான சமையல் வகைகளில் மறவாமல் இடம் பெறுவது பூண்டும், மிளகும். பூண்டு மற்றும் மிளகு சுவை, மணம், காரத்தினால் உணவிற்கு கூடுதல் ஈர்ப்பை தருகிறது. அதை தவிர்த்து இவை இரண்டும் சிறப்பு மிக்க மருத்துவ குணம் மிக்க பொருட்கள் ஆகும். பூண்டையும், மிளகையும் கொண்டு சுவையான சாதம் செய்வது எப்படி என பார்ப்போம்.

பூண்டு மிளகு சாதம் செய்ய தேவையான பொருட்கள்:

அரிசி சாதம், மிளகு – 2 ஸ்பூன், சீரகம் – ஒரு ஸ்பூன், பூண்டு – 10 பல், கடுகு – கால் டீஸ்பூன், வரமிளகாய் – 2, சின்ன வெங்காயம் – 10, கறிவேப்பிலை, உப்பு, எண்ணெய்,

முதலில் சின்ன வெங்காயம் தோல் உரித்து துண்டு துண்டாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், பூண்டை நசுக்கி போட்டு நன்றாக வாசம் வரும்படி வதக்கிக் கொள்ள வேண்டும்.

பூண்டு வாசம் நன்றாக வந்ததும் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும். சின்ன வெங்காயம் பொன்னிறமாக வறுபட்டதும், வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும். பின்னர் அதில் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும். சாதம் அளவை பொறுத்து அதற்கு ஏற்றவாறு உப்பை சேர்க்க வேண்டும்.

பிறகு அதில் சாதத்தை சேர்த்து நன்றாக கிளற வேண்டும். சாதத்தை இறக்கும் முன் மிளகை பொடியாக நசுக்கி சாதத்தின் மீது தூவி கிளறிக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்தால் சூடான, காரச்சாரமான பூண்டு, மிளகு சாதம் தயார்.

பூண்டும், மிளகும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடியவை. மேலும் மழை, குளிர்காலங்களில் இந்த சாதம் செய்து சாப்பிடுவதால் சளி, இறுமல் தொல்லைகள் நீங்கும்.

Edit by Prasanth.K