1. செய்திகள்
  2. »
  3. வ‌ணிக‌ம்
  4. »
  5. செய்திகள்
  6. ஆப்பிள் உற்பத்தி: இஸ்ரேலுடன் ஹிமாச்சல் ஒப்பந்தம்

ஆப்பிள் உற்பத்தி: இஸ்ரேலுடன் ஹிமாச்சல் ஒப்பந்தம்

ஆப்பிள் உற்பத்தி இஸ்ரேல் ஹிமாச்சல் குளு சிம்லா நீர் ஆளுமை
ஆப்பிள் மரங்களை அதிக உயரமுடைய மலைப் பகுதிகளில் இருந்து குறைந்த உயரங்களில் பயிர் செய்யும் முறை மற்றும் அதற்கான பாசன, தொழில் நுட்பம் ஆகியன குறித்து ஆராய இஸ்ரேலுடன் ஹிமாச்சல் பிரதேச மாநிலம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துக் கொண்டுள்ளது.

ஆப்பிள் மரங்கள் குறைந்தது 5,000 அடி உயரமுள்ள மலைப் பகுதிகளிலும், சரிவுகளிலுமே தற்போது பயிர் செய்யப்படுகின்றன. இதனை மிகக் குறைந்த உயரத்தில் பயிர் செய்து, நல்ல உற்பத்தியை எட்டி வருகிறது இஸ்ரேல். ஹிமாச்சலில் உள்ளது போன்ற தட்ப வெப்ப நிலையே இஸ்ரேலிலும் உள்ளது. எனவே, அதே முறையில் குறைந்த உயரமுடைய மலைப் பகுதிகளில் ஆப்பிள் உற்பத்தி செய்வது குறித்து பயிர் முறை, பாசன முறை தொடர்பான ஆலோசனைகளைப் பெற்று ஹிமாச்சலில் நடைமுறைப்படுத்த இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் வழிசெய்கிறது.

ஹிமாச்சல் மாநிலத்தில் குளு மாவட்டத்தில் மிகப் பெரிய அளவிற்கு ஆப்பிள் பயிரிடப்படுகிறது. இம்மாவட்டத்தில் பாயும் பியாஸ் நதிக் கரையில் ஆப்பிள் தோட்டங்கள் ஏராளமாக உள்ளன. இப்பகுதி கடல் மட்டத்திலிருந்து 4,000 அடி உயரத்தில் உள்ளது. சிம்லாவிலும் பெருமளவிற்கு ஆப்பிள் பயிர் செய்யப்படுகிறது.

குறைந்த உயரமுடைய மலைப் பகுதிகளில் ஆப்பிள் பயிரிடத் தோதான பாசன முறை, பாலி-ஹவுஸ் தொழில்நுட்பம், ஆப்பிள் அறுவடைக்குப் பிறகு அதனை குளிர்பதனம் செய்தல், கூட்டுறவு பண்ணை மூலம் உற்பத்தி ஆகியனவற்றை இஸ்ரேல் சென்ற ஹிமாச்சல் முதல்வர் துமால் பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்தே இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.

இதுமட்டுமின்றி, நீர் ஆளுமை, மரபு சாரா எரிசக்தி ஆகியவற்றிலும் இஸ்ரேலின் தொழில் நுட்ப ஆலோசனையை நாடியுள்ளது.

ஹிமாச்சலப் பிரதேசத்தில் குடிநீரே கழிவறைக்கும் பயன்படுத்தப்படுகிறது. குடி நீர் 95 விழுக்காடு அளவிற்கு மற்ற தேவைகளுக்காகவே பயன்படுத்தப்படுகிறது. இந்த நிலையைத் தவிர்க்க குடி நீர் ஆளுமை குறித்த ஆலோசனைப் பெறவும் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.