1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 16 மே 2024 (18:04 IST)

ஆர்சிபி கனவுக்கு ஆப்பு வைக்குமா மழை? மஞ்சள் படையை எதிர்கொள்ளும் நாளில் ஆரஞ்சு அலெர்ட்!

Kohli Dhoni
பெங்களூரில் சிஎஸ்கே – ஆர்சிபி இடையேயான ஐபிஎல் லீக் போட்டி நடைபெற உள்ள நாளில் பெங்களூரில் கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் ஆர்சிபி ரசிகர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.



நடப்பு ஆண்டு ஐபிஎல் சீசன் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் சென்றுக் கொண்டிருக்கிறது. லீக் போட்டிகள் கிட்டத்தட்ட முடிவை நெருங்கியுள்ள நிலையில் ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற 5 அணிகளிடையே கடும் போட்டி நிலவி வருகிறது. ஐபிஎல் லீக் போட்டிகளில் முதலில் சொதப்பி வந்த ஆர்சிபி அணி திடீரென அதிரடியாக விளையாட தொடங்கி வேகவேகமாக புள்ளி பட்டியலில் முன்னேறி 6வது இடத்தை அடைந்துள்ளது.

தற்போது ஆர்சிபி அணிக்கு சென்னை அணியுடனான ஒரு போட்டி மட்டுமே மீதமுள்ள நிலையில் அந்த போட்டியில் வென்றால் மட்டுமே ஆர்சிபி ப்ளே ஆப் செல்ல வாய்ப்பு கிடைக்கும். இந்த வாழ்வா சாவா போட்டியை ஆர்சிபி ரசிகர்களும் ஆர்வத்தோடு எதிர்பார்த்திருக்கின்றனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் இந்த போட்டியின் வெற்றி அவசியம் என்பதால் அந்த பக்கமும் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

ஆனால் வருணபகவானோ போட்டிக்கு வேறு கணக்குகளை போட்டுக் கொண்டிருப்பதாக தெரிகிறது. ஆங்காங்கே சில காலமாக மழை வெளுத்துவரும் நிலையில் மே 18ம் தேதி பெங்களூரில் போட்டி நடைபெற உள்ள அதே நாளில் பெங்களூருக்கு கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்டை விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம். ஒருவேளை மழையால் ஆட்டம் ரத்து செய்யப்பட்டால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்து அளிக்கப்படும். அப்படி அளிக்கப்பட்டால் ஆர்சிபியின் ப்ளே ஆப் கனவு தகர்ந்து விடும். மழை காரணமாக ஓவரை குறைப்பது கூட ஆர்சிபிக்கு பின்விளைவுகளை ஏற்படுத்தலாம் என்பதால் கலக்கத்தில் உள்ள ரசிகர்கள் இப்போதே மழை நிற்க வேண்டுதலை தொடங்கியுள்ளார்களாம்.

Edit by Prasanth.K