வங்கதேசத்தை வச்சு செய்யும் அமெரிக்கா கிரிக்கெட் அணி! தொடரை கைப்பற்றி அதிரடி!
வங்கதேசம் – அமெரிக்கா இடையே மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடந்து வரும் நிலையில் அதில் தொடர்ந்து 2 போட்டிகளையும் வென்று தொடரை கைப்பற்றியது அமெரிக்கா.
உலக கோப்பை டி20 போட்டிகளில் 4 பிரிவுகளில் மொத்தம் 20 நாட்டு கிரிக்கெட் அணிகள் மோதிக் கொள்ள உள்ளன. இந்நிலையில் தற்போது வங்கதேசம் – அமெரிக்கா இடையே நடைபெறும் கிரிக்கெட் போட்டி கவனம் பெற்றுள்ளது. சமீபமாக கிரிக்கெட்டில் அமெரிக்கா ஆர்வம் காட்டி வரும் நிலையில் இந்த முறை உலக கோப்பை டி20-ன் லீக் போட்டிகள் அமெரிக்காவில்தான் நடைபெறுகிறது. இதற்காக சில மாதங்களிலேயே பிரம்மாண்டமான மைதானங்களை அமெரிக்கா உருவாக்கியுள்ளது.
மேலும் அமெரிக்க கிரிக்கெட் அணியும் தங்களை வலுப்படுத்திக் கொண்டுள்ளது. தற்போது வங்கதேசத்துடன் அமெரிக்க அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஏற்கனவே முதல் போட்டியில் வென்ற நிலையில் தற்போது இரண்டாவது போட்டியையும் வென்று தொடரைக் கைப்பற்றியுள்ளது.
முதலில் பேட்டிங் செய்து 144 ரன்களை குவித்த அமெரிக்க அணி வங்கதேசத்தை 19.3 ஓவர்களில் 138 ரன்களுக்கு ஆல் அவுட் செய்து தொடரை கைப்பற்றியுள்ளது.
உலக கோப்பையில் அணி ஏ-பிரிவில் இந்தியாவுடன் அமெரிக்க அணி விளையாட உள்ளதால், அமெரிக்க அணியின் அதிரடி ஆட்டம் இந்தியாவுடன் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Edit by Prasanth.K