1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : வியாழன், 4 ஜனவரி 2024 (17:52 IST)

இரண்டே நாட்களில் முடிந்த டெஸ்ட் போட்டி.. ஆதிக்கம் செலுத்திய பந்து வீச்சாளர்கள்..!

team
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்ற நிலையில், பந்து வீச்சாளர்களின் ஆதிக்கத்தால் இரண்டே நாட்களில் போட்டி முடிவடைந்தது.
 
 
கேப்டவுனில் உள்ள நியூலேண்ட்ஸ் மைதானத்தில் நேற்று தொடங்கிய டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்ஸில் 55 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. முகமது சிராஜின் சீரான வேகம், துல்லியம், ஸ்விங் ஆகியவற்றை தாக்குப்பிடிக்க முடியாமல் 23.2 ஓவர்களில் 55 ரன்களுக்கு அந்த அணி சுருண்டது. 
 
முகமது சிராஜ் 9 ஓவர்களை வீசி 3 மெய்டன்களுடன் 15 ரன்களை வழங்கி 6 விக்கெட்களை வீழ்த்தினார். ஜஸ்பிரீத் பும்ரா 8 ஓவர்களை வீசி ஒரு மெய்டனுடன் 25 ரன்களை வழங்கி 2 விக்கெட்களையும், முகேஷ் குமார் 2.2 ஓவர்களை வீசி 2 மெய்டன்களுடன் ரன் ஏதும் கொடுக்காமல் 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 34.5 ஓவரில் 153 ரன்களில் ஆட்டம் இழந்தது.  33வது ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 153 ரன்கள் சேர்த்திருந்தது.
 
தென்னாபிரிக்காவின் லுங்கி இங்கிடி வீசிய 34வது ஓவரில், கே.எல்.ராகுல் 8 ரன்களுடனும், ஜடேஜா, பும்ரா டக்அவுட்டாக ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகளை பறிகொடுத்தது இந்திய அணி.  அடுத்த ஓவரில் விராட் கோலி 46 ரன்களில் அவுட்டாக, தொடர்ந்து பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ் அடுத்தடுத்து டக் அவுட்டாக 34.5 ஓவரில் 153 ரன்களில் இந்திய அணி ஆட்டமிழந்தது.
 
தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் நந்த்ரே பர்கர், லுங்கி இங்கிடி, ரபாடா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதன் மூலம் முதல் இன்னிங்ஸ் முடிவில் இந்திய அணி 98 ரன்கள் முன்னிலையில் இருந்தது.
 
தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 17 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 62 ரன்களைச் சேர்த்தது. இன்று இரண்டாவது நாள் ஆட்டத்தை தொடர்ந்த தென் ஆப்பிரிக்க அணி பும்ராவின் பந்து வீச்சில் ஒருபுறம் விக்கெட்களை இழந்தாலும், மறுபுறம் ஐடன் மார்க்ரம் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் அதிரடியாக விளையாடி சதம் பதிவு செய்தார்  106 ரன்கள் எடுத்திருந்த மார்க்ரமின் விக்கெட்டை சிராஜ் வீழ்த்தினார்.

இறுதியில் மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க தென் ஆப்பிரிக்க அணி 36.5 ஓவர்களுக்கு 176 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இந்திய தரப்பில் பும்ரா 6 விக்கெட், முகேஷ் குமார் 2 விக்கெட், பிரசித் கிருஷ்ணா மற்றும் சிராஜ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
 
தென் ஆப்பிரிக்க அணி 78 ரன்கள் முன்னிலை பெற்றதை அடுத்து இந்திய அணிக்கு 79 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதை அடுத்து களம் இறங்கிய இந்திய அணி, 3 விக்கெட்களை இழந்து 80 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் இரண்டு போட்டிள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி சமன் செய்தது. டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கிய நிலையில் பந்து வீச்சாளர்களின் ஆதிக்கத்தால் இரண்டே நாட்களில் போட்டி முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது.