இலங்கை அணியை துவைத்த சூர்யகுமார்! ஆனா இது ஈஸியா கிடைக்கல! – மனம் திறந்த சூர்யகுமார்!
இலங்கையுடனான டி20 தொடரில் இந்தியா வெற்றிப்பெற்ற நிலையில் சூர்யகுமார் யாதவ் தனது அதிரடி ஆட்டம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
இலங்கை – இந்தியா இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் போட்டியில் வெற்றி பெற்றது. முதல் ஆட்த்தில் இந்திய அணியும், இரண்டாவது ஆட்டத்தில் இலங்கை அணியும் வெற்றி பெற்று 1-1 என்று சமநிலையில் இருந்த நிலையில் மூன்றாவது ஆட்டம் மிகவும் எதிர்பார்க்கப்பட்டது.
முதலில் பேட்டிங் செய்த இந்தியா 5 விக்கெட் இழப்புக்கு 228 ரன்களோடு தனது ஆட்டத்தைப் பூர்த்தி செய்தது. அதைத் தொடர்ந்து ஆடிய இலங்கை 17வது ஓவரிலேயே 10 விக்கெட்களையும் இழந்து 137 ரன்களோடு தோல்வியடைந்தது.
இந்த போட்டியில் இந்திய அணி வீரர் சூர்யகுமார் யாதவ் 51 பந்துகளில் 112 ரன்களை குவித்தது அணியின் வெற்றிக்கு மிகவும் முக்கியமான திருப்புமுனையாக இருந்தது. இதுகுறித்து பேசியுள்ள சூர்யகுமார் யாதவ் "இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் சிறப்பாக விளையாடியதில் எனக்கு மகிழ்ச்சி. இந்த வெற்றியால் நான் கொண்டாடப்படுவேன் என்று தெரியும். ஆனால் இந்த வெற்றி எனக்கு எளிதில் கிடைத்துவிடவில்லை. இதற்காக நான் கடினமாக உழைத்தேன். ஒரு போட்டிக்கு முன்னால் உங்கள் மீது ஏற்படும் அழுத்தத்தை சரியாக பயன்படுத்தினால் விளையாட்டு எளிதாக அமையும்" என கூறியுள்ளார்.