ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வெள்ளி, 19 ஏப்ரல் 2024 (07:28 IST)

“எங்கள் வீரர்களுக்கு த்ரில்லர் பிடித்துப் போய்விட்டது..” தோல்விக்குப் பின் பஞ்சாப் கேப்டன்!

ஐபிஎல் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில் நேற்று மொகாலியில் பஞ்சாப் மற்றும்  மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.

அதன் படி களமிறங்கிய மும்பை அணி ரோஹித் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 192 ரன்கள் சேர்த்தது. அதிரடியாக விளையாடிய சூர்யகுமார் 53 பந்துகளில் 78 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். பஞ்சாப் அணி சார்பாக ஹர்ஷல் படேல் அதிகபட்சமாக 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

இதன் பின்னர் பஞ்சாப் அணி பேட் செய்ய வரும் போது ஆரம்பத்திலெயே விக்கெட்களை இழந்து தடுமாறியது. முதல் 10 ஓவர்களுக்குள்ளேயே 6 விக்கெட்களை இழந்தது. ஆனால் அதன் பின்னர் ஜோடி சேர்ந்த ஷஷாங்க் சிங் மற்றும் அஷுடோஷ் சர்மா ஆகியோர் மிகச்சிறப்பாக விளையாடி இலக்கை நெருங்கினர். ஆனால் இருவரும் முக்கியமானக் கட்டத்தில் தங்கள் விக்கெட்களை இழந்ததால் பஞ்சாப் அணியால் 182 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது. இதன் மூலம் 10 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி தோற்றது. 3 விக்கெட்களைக் கைப்பற்றிய பும்ரா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

தோல்விக்குப் பின்னர் பேசிய பஞ்சாப் அணிக் கேப்டன் சாம் கரண் “எங்கள் அணிக்கு பரபரப்பான த்ரில்லர் போட்டிகள் பிடித்துவிட்டது போல. இவ்வளவு பக்கத்தில் வந்து தோற்றால் அது யாருக்குமே பிடிக்காது. ரசிகர்களைப் போலவே எங்களின் இதயமும் நொறுங்கிவிட்டது. அஷ்டோஷ் மற்றும் ஷஷாங்க் ஆகியோரின் ஆட்டம் மிகச்சிறப்பாக இருந்தது. வரும் காலங்களில் எங்கள் வீரர்கள் அணியை வெற்றிப் பெறச் செய்வார்கள் என்று நம்புகிறேன்” எனக் கூறியுள்ளார்.