திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : திங்கள், 20 நவம்பர் 2023 (07:39 IST)

எந்த காரணமும் சொல்லப்போவதில்லை… தோல்விக்கு இதுதான் காரணம்- ரோஹித் ஷர்மா!

நேற்று நடந்த இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில் இந்திய அணி முதலில்  பேட்டிங் செய்தது. ஆஸி அணியின் தாக்குதலை சமாளிக்க முடியாத இந்திய பேட்ஸ்மேன்கள் தங்கள் விக்கெட்களை இழந்து தடுமாறினர். இதனால் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 240 ரன்கள் மட்டுமே சேர்த்தது.

இந்த குறைவான இலக்கை வைத்து வெற்றிக்கு போராடிய இந்திய அணி ஆரம்பத்தில் 3 விக்கெட்களை அடுத்தடுத்து வீழ்த்தியது. ஆனால் அதன் பின்னர் டிராவிஸ் ஹெட் மற்றும் மார்னஸ் லபுஷான் இணை திறமையாகவும் நிதானமாகவும் விளையாடி ஆஸி அணியை மீட்டெடுத்தது. இதன் மூலம் 43ஆவது ஓவரில் ஆஸ்திரேலிய அணி இலக்கை எட்டியது.

இந்த தோல்விக்குப் பின்னர் இந்திய அணியினர் மணமுடைந்து கண்ணீர்த் துளிகளோடு காணப்பட்டனர். போட்டிக்கு பின்னர் பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா “இந்த தோல்விக்கு நாங்கள் எந்த சாக்கு போக்கும் சொல்லப் போவதில்லை. இன்று நாங்கள் எவ்வளவோ முயன்றும் ஆட்டம் எங்களுக்கு சாதகமாக வரவில்லை. நாங்கள் இன்னும் ரன்கள் சேர்த்திருக்க வேண்டும்.

கோலியும் ராகுலும் விளையாடும் போது நாங்கள் 270-280 ரன்கள் சேர்ப்போம் என நினைத்தோம். ஆனால் வரிசையாக விக்கெட்கள் விழுந்தன. குறைந்த இலக்கோடு விளையாடும் போது நாங்கள் இன்னும் அதிக விக்கெட்களை  விரைவாக வீழ்த்தி இருக்க வேண்டும். ஆனால் லபுஷான் –டிராவிஸ் ஹெட் கூட்டணி சிறப்பாக விளையாடி போட்டியை எங்களிடம் இருந்து பறித்துக் கொண்டனர்” எனக் கூறியுள்ளார்.