அக்ஸர் படேலிடம் கையெடுத்து கும்பிட்டு மன்னிப்புக் கேட்ட ரோஹித் ஷர்மா!
சாம்பியன்ஸ் கோப்பைத் தொடரில் இந்தியா நேற்று தங்கள் முதல் போட்டியில் விளையாடியது. இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நேற்று நடந்த சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடந்தது.
இதில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 49 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 228 ரன்கள் எடுத்தது. ஹிருடாய் அபாரமாக விளையாடி சதம் அடித்தார். இந்திய தரப்பில், முகமது ஷமி சிறப்பாக பந்துவீசி ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனை அடுத்து, 229 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணியில் ஷுப்மன் கில்லின் அபாரமான சதத்தால் எளிதாக வெற்றியைப் பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி வீரர் அக்ஸர் படேல் நூலிழையில் ஹாட்ரிக் விக்கெட் எடுக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
அவர் அடுத்தடுத்து டன்ஸித் ஹசன் மற்றும் முஷ்புஹீர் ரஹீம் ஆகியோரின் விக்கெட்டை வீழ்த்தினார். அடுத்து வந்த ஜேக்கர் அலி அவர் பந்தை எதிர்கொண்ட போது பேட்டில் எட்ஜ் வாங்கி ஸ்லிப்பில் நின்ற ரோஹித் ஷர்மாவுக்கு கேட்ச்சாக சென்றது. ஆனால் அவர் அந்த எளிய கேட்ச்சை கோட்டை விட்டார். இதனால் ஐசிசி தொடரில் ஹாட்ரிக் எடுத்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையைப் படைக்கும் வாய்ப்பை அக்ஸர் இழந்தார். தான் செய்த தவறுக்காக ரோஹித் ஷர்மா அக்ஸர் படேலிடம் மன்னிப்புக் கேட்டார்.