கோலியிடம் இன்னும் சில ஆண்டுகளுக்கான கிரிக்கெட் உள்ளது… ரவி சாஸ்திரி கருத்து!
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற நியுசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் அபாரமாக விளையாடிய விராட் கோலி சதம் அடித்துள்ளார். இது ஒருநாள் போட்டிகளில் அவரது ஐம்பதாவது சதமாகும். இதன் மூலம் ஒருநாள் போட்டிகளில் சச்சினின் சாதனையான 49 சதம் என்ற சாதனையை முறியடித்துள்ளார்.
இதன் மூலம் ஒட்டுமொத்தமாக கோலி 80 சர்வதேச சதங்களை அடித்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் 50 சதங்களும், டெஸ்ட் போட்டிகளில் 29 சதங்களும், டி 20 போட்டிகளில் ஒரு சதமும் அடித்துள்ளார். அவரால் இன்னும் 20 சதங்கள் அடித்து சச்சினின் சாதனையான 100 சதங்களைக் கடப்பார் என ரசிகர்கள் ஆர்வமாகக் காத்திருக்கின்றனர்.
இதுபற்றி பேசியுள்ள இந்திய முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி “கோலியிடம் இன்னும் 3-4 ஆண்டுகளுக்கான கிரிக்கெட் மீதமுள்ளது. அவர் மட்டும் ரன்களை சேர்க்க ஆரம்பித்து விட்டால் அதை நிறுத்தவே முடியாது. அடுத்த 10 இன்னிங்ஸ்களில் அவர் 5 சதங்களை அடிப்பார். அவரால் சச்சினின் 100 சதங்கள் என்ற சாதனையை முறியடிக்க முடியும். அவரின் சிறப்பே அவரால் பவுண்டரி அடிக்க முடியாத போது, ரன்களை ஓடி சேர்க்கிறார் என்பதுதான். பின்னர் அதிரடியாக ஆடி அதை சமன் செய்து கொள்கிறார்” எனக் கூறியுள்ளார்.