திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : செவ்வாய், 16 ஜூலை 2024 (10:04 IST)

பிசிசிஐ பக்கம் சாயும் ஐசிசி… அதிருப்தியில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்!

8 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கவுள்ள சாம்பியன்ஸ் கோப்பை தொடரை அடுத்த ஆண்டு பாகிஸ்தான் நடத்துகிறது. இதில் இந்திய அணி கலந்துகொள்வது குறித்து குழப்பமான செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் எப்படியும் இந்திய அணி கலந்துகொள்ளும் என கடந்த சில மாதங்களாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் இப்போது மீண்டும் பிசிசிஐ, பாகிஸ்தான் செல்ல முடியாது என ஐசிசியிடம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இந்திய அணி விளையாடும் போட்டிகளை இலங்கை அல்லது ஐக்கிய அரபு அமீரகத்தில்  நடத்துமாறும் ஐசிசிக்கு அழுத்தம் கொடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

ஆனால் இதை ஏற்கமறுக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் “எங்கள் மைதானங்களைப் புதுப்பிக்கவும், அவற்றின் தரத்தை உயர்த்தவும் பல கோடி ரூபாய் செலவு செய்துள்ளோம். அதனால் சாம்பியன்ஸ் கோப்பை தொடர் பாகிஸ்தானில்தான் நடக்கவேண்டும். இந்தியா எந்த முடிவை எடுத்தாலும் வேறு எங்கும் நடத்த விடமாட்டோம்” என்ற வாதத்தை வைத்துள்ளது.

ஆனால் இந்த விஷயத்தில் ஐசிசி, பிசிசிஐ பக்கம்தான் நிற்பதாக சொல்லப்படுகிறது. ஏனென்றால் இந்தியா இல்லையென்றால் அவர்களுக்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்படும். அதனால் ரகசியமாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் சமாதானப் பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. இது அவர்களிடையே கோபத்தையும் அதிருபதியையும் ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது.

மேலும் “இந்திய அரசு அணியை பாகிஸ்தானுக்கு அனுப்ப மறுப்பதாக பிசிசிஐ சொன்னால், இந்திய அரசு தந்த எழுத்துப் பூர்வமானக் கடிதத்தைக் காட்டவேண்டும். அப்போதுதான் எங்களால் முடிவெடுக்க முடியும்” எனவும் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.