சரியான பேட்டிங் இல்லாததால் தோல்வியடைத்தோம்! – தோனி விளக்கம்!
நேற்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை அணி தோல்வியடைய அணியின் பேட்டிங் சிறப்பாக இல்லாததே காரணம் என அணி கேப்டன் தோனி கூறியுள்ளார்.
நடப்பு ஆண்டிற்கான ஐபிஎல் சீசன் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் நேற்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை எதிர்கொண்டது.
முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்களை குவித்தது. பின்னர் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்களே எடுத்து தோல்வியை தழுவியது.
இதுகுறித்து பேசியுள்ள சென்னை அணி கேப்டன் தோனி “நாங்கள் அவர்களை 170 ரன்னுக்கு கட்டுப்படுத்தியது நன்றாக இருந்தது. உண்மையில் எங்களை வீழ்த்தியது பேட்ஸ்மேன்ஷிப். இலக்கை சேசிங் செய்யும்போது ரன் எவ்வளவு தேவை, பந்து வீச்சாளர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை நீங்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
பேட்ஸ்மேன்ஷிப் சற்று சிறப்பாக இருந்திருந்தால் கடைசி சில ஓவர்களில் எங்களுக்கு அதிக ரன் தேவைப்பட்டிருக்காது. புள்ளிகள் அட்டவணையில் எந்த இடத்தில் இருந்தீர்கள் என்பதை விட, உங்களது செயல்முறை முக்கியமானது. அந்த விஷயங்களை கவனித்து கொண்டால் புள்ளி அட்டவணை தன்னைத்தானே கவனித்துக் கொள்ளும்” என்று தெரிவித்துள்ளார்.