அதை நான் ஊடகங்களிடம் சொல்லக் கூடாது… பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஜாலியாகப் பேசிய கே எல் ராகுல்!
இந்தியா - ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் இடையேயான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் ட்ராபி டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது டெஸ்ட் டிசம்பர் 6ம் தேதி(நாளை) தொடங்கி நடைபெற உள்ளது.
முதல் போட்டியில் ரோஹித் ஷர்மா ஆடாததால் அவருக்கு பதில் தொடக்க ஆட்டக்காரராக ஆடினார் கே எல் ராகுல். முதல் போட்டியில் மிகச்சிறப்பாக பாட்னர்ஷிப்பை உருவாக்கிய கே எல் ராகுல் இரண்டாவது போட்டியிலும் தொடக்க ஆட்டக்காரராகவே விளையாட வேண்டும் என்றும் ரோஹித் ஷர்மா மிடில் ஆர்டரில் ஆடவேண்டும் எனவும் கருத்துகள் விவாதிக்கப்படுகின்றன.
இந்நிலையில் போட்டிக்கு முன்பாக பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்துகொண்ட கே எல் ராகுலிடம் பத்திரிக்கையாளர்கள் இது சம்மந்தமாக கேள்வி எழுப்பினர். அதற்கு கே எல் ராகுல் “இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் என்ன என்பது குறித்து எனக்கு ஏற்கனவே சொல்லப்பட்டு விட்டது. ஆனால் அதை ஊடகங்களிடம் சொல்லக் கூடாது என்றும் என்னிடம் கூறியுள்ளனர். அதனால் நான் அதை உங்களிடம் சொல்லக் கூடாது” எனப் பேசி பத்திரிக்கையாளர்களை சிரிக்க வைத்தார்.