1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வியாழன், 16 மே 2024 (08:07 IST)

சி எஸ் கே அணியை விட்டு விலகுகிறாரா ஸ்டீபன் பிளமிங்? காசி விஸ்வநாதன் பதில்!

இந்திய கிரிக்கெட் அணிக்கு மூன்று வடிவிலான போட்டிகளுக்கும் தலைமை பயிற்சியாளராக கடந்த மூன்று ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறார் ராகுல் டிராவிட். ஆனால் அவர் தலைமையில் முக்கியமான சில கோப்பை தொடர்களில் இந்திய அணி தோற்று வெளியேறியது அதிருப்தியை ஏற்படுத்தியது. ஆனாலும் அவரது பதவிக்காலம் 8 மாத காலம் நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் வரும் ஜூன் மாதத்தோடு அவரது பதவிக்காலம் முடிவடைகிறது.

இந்திய அணிக்கு புதிய பயிற்சியாளரை தேடும் பணியில் பிசிசிஐ ஈடுபட்டு வருகிறது. அதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவித்துள்ளது. இதற்கிடையில் இந்திய அணிக்குப் பயிற்சியாளராக பணியாற்ற சி எஸ் கே அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங்கிடம் பேச்சுவார்த்தை நடத்துவதாக சொல்லப்படுகிறது. அவர் தலைமையில் சி எஸ் கே அணி ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

இதனால் அவர் சி எஸ் கே அணியின் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து விலக உள்ளதாக சொல்லப்பட்டது. இதுபற்றி சிஎஸ்கே அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் பேசியுள்ளார். அதில் “இதுபற்றிய தகவல் எதையும் நான் கேள்விப்படவில்லை. நாங்களும் பிளமிங்கிடம் எதையும் பேசவில்லை. அவரும் இதுபற்றி எங்களுக்கு எந்த தகவலும் சொல்லவில்லை” எனக் கூறியுள்ளார்.