திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : வெள்ளி, 5 ஜனவரி 2024 (22:59 IST)

ஆஸ்திரேலியாவை பந்தாடிய இந்திய மகளிர் அணி..! 9 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி.!!

cricket
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி-20 போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணி அபார வெற்றி பெற்றது.
 
ஆஸ்திரேலியா மகளிர் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றிய நிலையில், மூன்று போட்டிகள்  கொண்ட ஒரு நாள் தொடரை ஆஸ்திரேலியா வென்றது.
 
இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டி-20 கிரிக்கெட் போட்டி மும்பையில் உள்ள டி.ஒய். படேல் மைதானத்தில் நடைபெற்றது. 

டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா மகளிர் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 141 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலியா அணி தரப்பில் அதிகபட்சமாக ஃபோப் லிட்ச்ஃபீல்ட் 49 ரன்கள் எடுத்தார்.
 
இந்திய வீராங்கனை டைட்டாஸ் சாது தனது அபார பந்து வீச்சால் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தீப்தி சர்மா, ஸ்ரேயங்கா பாட்டீல் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர். 
 
142 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களம் இறங்கிய இந்திய அணியின் தொடக்க வீராங்கனைகள் ஸ்மிருதி மந்தனா, ஷஃபாலி வர்மா ஆகிய இருவரும் அதிரடியாக விளையாடி அரை சதம் எடுத்தனர். ஸ்மிருதி மந்தனா 54 ரன்களில் ஆட்டமிழக்க, 17.4ஆவது ஓவரில் 145 ரன்கள் எடுத்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணி அபார வெற்றி பெற்றது. 
 
4 விக்கெட்டுகளை கைப்பற்றிய டைட்டாஸ் சாதவிற்கு ஆட்ட நாயகி விருது வழங்கப்பட்டது. இதில் வெற்றி பெற்றதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் இந்திய மகளிர் அணி முன்னிலையில் உள்ளது.